விசேஷ நாட்களில் வீட்டில் சிறப்பான உணவு வகைகள் சமைப்பது வழக்கம். அதிலும் அனைத்து விதமான காய்கறிகளை வைத்து சமையல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். அந்த வகையில் எளிமையான முறையில் கதம்ப சாதம் நம் வீட்டில் செய்து அசத்தலாம் வாங்க…
ஒரு கிலோ பச்சரிசிக்கு 350 கிராம் பாசிப்பருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து பச்சரிசியை தனியாக முதலில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் 350 கிராம் அளவு பாசிப்பருப்பை தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, கால் தேக்கரண்டி வெந்தயம், காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து காய்ந்த வத்தல், துருவிய தேங்காய் அரை கப் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த இந்த பொருட்கள் சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். கதம்ப சாதம் செய்வதற்கு நம் வீட்டில் உள்ள காய்கறிகளை பயன்படுத்தினால் போதுமானது. உதாரணமாக உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், சௌசௌ, பூசணி, முருங்கைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், மாங்காய், முள்ளங்கி என அனைத்து விதமான காய்கறிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீர் சூடானதும் நமக்கு விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் இதில் பாதி எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல், அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைக்க வேண்டும்.
நினைத்தாலே நாவில் எச்சில் ஊரும் வேர்க்கடலை பால்கோவா!
இரண்டு நிமிடம் நன்கு கொதிக்கும் பொழுது மசாலாக்களின் பச்சை வாசனை சென்றுவிடும். அதன் பின் நம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அதை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் பின் இந்த கலவை அடுத்த இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது ஒரு சிறிய கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை தாளித்து இந்த குழம்பில் ஊற்றி கிளறி கொள்ளலாம் . இறுதியாக நாம் முதலில் வேக வைத்திருக்கும் பச்சரிசியை இதில் கலந்து ஒரு பத்து நிமிடம் மூடி வைத்தால் சுவையான கதம்ப சாதம் தயார்.