மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் பொழுது மசால் வடை வைத்து சாப்பிடுவது பலரின் வழக்கமாக உள்ளது. அதை மசால் வடையை சற்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் சேர்த்து செய்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும். வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த மசால் வடையை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி வெண்டைக்காய் மசால் வடை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
மசால் வடை செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து விட வேண்டும்.
கடலைப்பருப்பு ஊறும் நேரத்தில் ஐந்து முதல் 10 வெண்டைக்காய்களில் கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, மூன்று பல் வெள்ளை பூண்டு சேர்த்து முதலில் பரபரவென அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த அந்த விழுதுகளுடன் நாம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு மீண்டும் ஒரு முறை கழுவி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். கடலைப்பருப்பு மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை பரபரவென அரைத்துக் கொண்டால் போதுமானது.
கடலைப்பருப்பு அரைக்கும் பொழுது அதனுடன் அரை தேக்கரண்டி சோம்பு 4 முதல் 5 லவங்கம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதுகளை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இரண்டு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி , அரை தேக்கரண்டி உப்பு சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காத பட்சத்தில் வெறும் கடாயில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்காமல் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி வருத்தபின் வெண்டக்காயை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை சுத்தமாக தெரியாது. இப்படி வறுத்த வெண்டைக்காயை நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவினுடைய சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்பொழுது வெண்டைக்காய் மசால் வடை செய்வதற்கு மாவு தயாராக உள்ளது.
ஹைதராபாத்தில் மிக பிரபலமான அப்பல்லோ சிக்கன்!
ஒரு அகலமான கடாயில் பொறித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக முதலில் உருட்டி அதன் பின் மட்டமாக தட்டிக் கொள்ள வேண்டும். தட்டிய இந்த உருண்டைகளை மிதமான தீயில் எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.
இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்துவிடலாம். இப்பொழுது வெண்டைக்காய் மசால் வடை தயார்.