சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு ஏற்ற ஒரே சைடிஷ்! வெஜிடபிள் சால்னா! அருமையான ரெசிபி!

சப்பாத்தி, பூரி, புரோட்டா சாப்பிட காரசாரமான சைடிஷ் இருந்தால் அருமையாக இருக்கும். அந்த சைடிஷ் காரசாரமாக மட்டுமில்லாமல் சத்து நிறைந்ததாகவும் குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடும் விதத்திலும் அமைய வேண்டும். அந்த வகையில் வீட்டில் உள்ள அனைத்து காய்கறிகளையும் பயன்படுத்தி வெஜிடபிள் சால்னா செய்வதற்கான எளிமையான ரெசிபி. இதோ!

வெஜிடபிள் சால்னா செய்வதற்கு முதலில் தேவையான மசாலாக்களை அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், சிறிதளவு கல்பாசி சேர்த்து நன்கு பருக்க வேண்டும். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயம் பாதி வதங்கியதும் ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அரை கப் தேங்காய் துருவல், 10 முதல் 15 முந்திரி பருப்பு, ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இறுதியாக கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி இந்த பொருட்களை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவிட வேண்டும். வதக்கிய பொருட்களின் சூடு குறைந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு கார மசாலா!

இப்பொழுது கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய மல்லிபுதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது குருமாவிற்கு நம்மிடம் உள்ள காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக ஒரு உருளைக்கிழங்கு, ஒரு கேரட், 10 பீன்ஸ், பாதி அளவு பீட்ரூட், ஒரு கப் பச்சை பட்டாணி, பாதி அளவு சௌசௌ, ஒரு கப் காலிபிளவர் என நமக்கு விருப்பமான காய்கறிகளை இதில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

காய்கறிகள் பாதி வதங்கியதும் ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

10 முதல் 15 நிமிடங்களில் காய்கறிகள் நன்கு வெந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்த்து மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து நிமிடம் கொதித்தால் போதுமானது. கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து சால்னா கெட்டியாக மாறி வரும். சூடான சுவையான வெஜிடபிள் சால்னா தயார்.