ஆட்டுக்கால் பாயாவிற்கு போட்டியாக களமிறங்கிய வெஜிடபிள் பாயா! தரமான ரெசிபி இதோ!

அசைவ பிரியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று ஆட்டுக்கால் பாயா. சத்து நிறைந்த இந்த ஆட்டுக்கால் பாயாவை சைவ பிரியர்கள் பொதுவாக விரும்புவதில்லை. அவர்களுக்காக அதே சுவையில் காய்கறிகளை வைத்து பாயா செய்து அசத்தலாம் வாங்க. வெஜிடபிள் பாயா செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ.

இந்த பாயா செய்வதற்கு முதலில் ஒரு மசாலா அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயில் சிறிதளவு என்னை சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம். மூன்று பட்டை, 3 கிராம்பு, மூன்று ஏலக்காய், ஒரு பிரியாணி இலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். அடுத்ததாக அதை கடாயில் இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டிய அவசியம் இல்லை. சற்று பெரிதாக கூட நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக கண்ணாடி பதத்தில் வதங்கினால் போதுமானது. அதனுடன் ஒரு கப் தேங்காய் துருவல் , ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை, ஒரு தேக்கரண்டி பொரிகடலை, ஒரு தேக்கரண்டி கசகசா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

வதக்கிய இந்த பொருட்களை சில நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும் அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை சென்றவுடன் இந்த பாயா செய்வதற்கு தேவையான காய்கறிகளை நாம் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதாவது பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் இந்த காய்கறிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து எண்ணெயில் கிளற வேண்டும். காய்கறிகள் எண்ணையுடன் நன்கு வதங்கியதும் ஒரு தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள், ஒன்றை தேக்கரண்டி மல்லித்தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் முதலில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை பொடியாக நறுக்கி தூவி கொள்ளவும்.

வெண்டைக்காய் வைத்து  எப்பவும் காரக்குழம்பு, சாம்பார் தானா!  நார்த் இந்தியன் ஸ்டைல் பிந்தி மசாலா!

மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து காய்கறிகள் வெந்து உள்ளதா என கவனித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நேரம் மிதமான தீயில் வைத்த வேகவைத்து கொள்ளலாம். காய்கறிகள் நன்கு வந்ததும் சுவைக்கேற்ப உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் பாயா தயார்.

இந்த பாயா இட்லி, தோசை, சப்பாத்தி. பூரி, இடியாப்பம், ஆப்பம் என அனைத்திற்கும் ஒரு சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.