விருந்தினர்கள் யாராவது வீட்டிற்கு வருகை புரிந்தால் ஏதாவது இனிப்பு செய்து கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். வழக்கமாக செய்யும் கேசரி, பாயாசம் போன்று இல்லாமல் வித்தியாசமாக உங்கள் வீட்டில் பிரெட் இருந்தால் இப்படி இந்த ஸ்வீட்டை செய்து பாருங்கள். வெறும் 15 நிமிடத்தில் எளிமையாக இந்த ஸ்வீட்டை செய்துவிடலாம். மேலும் இதை செய்வதற்கும் அதிக பொருட்கள் தேவையில்லை. குறைவான பொருட்களே போதுமானது.
பிரட், பால் போன்ற பொருட்கள் மட்டுமே பயன்படுத்தி செய்வதால் இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக கொடுக்கலாம். பள்ளி விட்டு பசியோடு வரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம். வாருங்கள் குழந்தைகளிலிருந்து பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலான இந்த பிரட் ஸ்வீட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பரங்கிக்காய் வைத்து சுலபமாய் செய்யலாம் சுவையான பரங்கிக்காய் அல்வா!
இந்த பிரட் ஸ்வீட் செய்வதற்கு முதலில் இதற்கான பாலை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அரை லிட்டர் அளவு கெட்டியான பால் எடுத்து இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு பௌலில் ஒரு டீஸ்பூன் அளவு கஸ்டட் பவுடரை கால் கப் தண்ணீர் விட்டு கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது பால் நன்கு கொதித்து வந்த பிறகு அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் கஸ்டட் கரைசல் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். கொஞ்சமாக வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம். கட்டிகள் ஏதும் இல்லாமல் நன்றாக கலக்கிய பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பால் நன்றாக கெட்டிப்பட வேண்டும். பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்து இதனை ஆறவிடலாம்.
பால் நன்றாக ஆறிய பிறகு இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்த பிறகு பால் இன்னும் கூடுதலாக கெட்டிப்பட்டு இருக்கும் இது நம்முடைய இனிப்பிற்கு நல்ல சுவை கொடுக்கும். பிறகு எட்டு பிரட் துண்டுகளை எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் பிரட் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நாம் நறுக்கி எடுத்து இருக்கும் பிரட்டை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ப்ரெட் பொன்னிறமாக பொரிந்ததும் இதனை எடுத்து தனியாக வைத்து விடலாம்.
பிறகு ஒரு பாத்திரத்தில் கால் கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சவும். கம்பி பதம் ஏதும் வரவேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை தண்ணீரில் முழுமையாக கரைந்தால் போதும். இதனுடன் சிறிதளவு குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் பொரித்து வைத்திருக்கும் பிரட் துண்டுகளை சர்க்கரை சிரப்பில் நனைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. லேசாக நனைத்து எடுத்துக் கொண்டால் போதும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாலில் கால் கப் சுகர் பவுடர் சேர்த்து அதையும் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஹோட்டல் மற்றும் கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையில் சூப்பரான பிரட் அல்வா!
இப்பொழுது நனைத்து எடுத்த பிரட் துண்டுகளின் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் பாலை ஊற்றி விடலாம். இதன் மேல் உங்களுக்கு விருப்பமான நட்ஸை பொடி பொடியாக நறுக்கி தூவி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் பிரட் ஸ்வீட் தயாராகி விட்டது.