அடேங்கப்பா… மணமணக்கும் ருசியான மீன் குழம்புக்கு அருமையான டிப்ஸ்கள்!

மீன் குழம்பு அசைவ பிரியர்களின் ஒட்டுமொத்த ஃபேவரைட் உணவு என்று சொல்லலாம். மீன் குழம்பின் சுவையும் மணமும் அனைவரையும் சுண்டி இழுத்து விடும். மீன் குழம்பை உணவகங்கள், திருமண வீடுகள் போன்ற இடங்களில் சாப்பிட்டாலும் நம் வீட்டில் அம்மாவோ, பாட்டியோ செய்யும் மீன் குழம்பின் சுவைக்கு அது ஈடாகாது. அதுவும் முதல் நாள் செய்த மீன் குழம்பை மறுநாள் சாப்பிட அது இன்னும் கூடுதல் ருசியாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த மீன் குழம்பை நீங்களும் உங்கள் அம்மா அல்லது பாட்டி கைப்பக்குவத்தில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கு மீன் குழம்பு செய்யும்போது சில சிறிய டிப்ஸ்களை பின்பற்றினால் போதும். மணமணக்கும் ருசி மிகுந்த மீன் குழம்பு நீங்களும் செய்யலாம். வாருங்கள் மீன் குழம்பு செய்யும் பொழுது பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!

1. மீன் குழம்புக்கான புளிக்கரைசலை தயார் செய்யும் பொழுது பழைய புளியை பயன்படுத்துங்கள். கடைகளில் மீன் குழம்புக்கு என்றே பழைய புளியை கேட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது குழம்புக்கு நிறத்தையும் நல்ல புளிப்பு தன்மையையும் கொடுக்கும்.

2. நெத்திலி மீன் குழம்பு என்றால் புளி அதிகம் சேர்க்க தேவையில்லை. அதற்கு பதிலாக தக்காளியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

3. பெருங்காயம் மற்றும் வெந்தயம் இரண்டையும் தனியாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பில் அரை டீஸ்பூன் இந்த பொடியை சேர்த்து செய்தால் குழம்பு நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

4. மீன் குழம்பை கூடுமானவரை நல்லெண்ணெய் சேர்த்து செய்யுங்கள். மற்ற எண்ணெய்களில் செய்வதை விட நல்லெண்ணெயில் செய்யும் பொழுது குழம்பு நன்றாக இருக்கும்.

5. மீன் குழம்பை இறக்கும் பொழுது இரண்டு சிறிய வெங்காயத்தை தட்டி இறுதியாக சேர்த்து இறக்குங்கள் குழம்பு நல்ல ருசியாக இருக்கும்.

6. மீன் குழம்பு செய்யும் பொழுது மசாலாக்கள் சேர்ப்பதற்கு பொடி வகைகளை பயன்படுத்துவதை விட அரைத்த மசாலாக்களை பயன்படுத்தி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

7. அயிரை மீன் குழம்பு செய்யும் பொழுது சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு அதன் பிறகு மீனை போட்டு இறக்கினால் குழம்பு நல்ல ருசியுடன் இருக்கும்.

8. பெரும்பாலும் மீன் குழம்புக்கு மீனை போட்டு அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. மீன் கரைந்து விடும். எனவே குழம்பு நன்கு கொதித்த பிறகு மீன் சேர்த்து சில நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி விட வேண்டும்.

9. மாங்காய் சீசன் என்றால் தவறாது உங்கள் மீன் குழம்பில் மாங்காய் சேர்த்து செய்யுங்கள். மாங்காய் சேர்த்து செய்யும் மீன் குழம்புக்கு எப்பொழுதும் தனி சுவைதான்.

கிராமத்து சுவையில் அட்டகாசமான நெத்திலி மீன் குழம்பு… இப்படி செய்து பாருங்கள்…!

10. மண் சட்டியில் மீன் குழம்பு வைக்கும் பொழுது அதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும். எனவே மீன் குழம்புக்கு என்று தனியாக ஒரு மண் சட்டி வாங்கி வைத்துக் கொண்டாலும் சிறப்பு தான்.