சுலபமான சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்…!

சர்க்கரை வள்ளி கிழங்கு நார்ச்சத்து நிறைந்த ஒரு கிழங்கு வகையாகும். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க சர்க்கரை வள்ளி கிழங்கு ஒரு நல்ல தேர்வு. மேலும் சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் கண் மற்றும் சருமம் என அனைத்திற்கும் நன்மை தரக்கூடியது. இதில் போலிக் அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்களும் இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடலாம்.

குழந்தைக்கு ஏழாவது மாதத்தில் இருந்தே இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை அவித்து மசித்து கொடுக்கலாம். சர்க்கரைவள்ளி கிழங்கு அவித்து அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இதன் சுவை பிடிக்காது. அதனால் சுவையாக அதேசமயம் சுலபமாக இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு எப்படி வறுவல் செய்து சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமான புடலங்காய் வறுவல்…!

சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல் செய்வதற்கு முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரை கிலோ அளவு சர்க்கரை வள்ளி கிழங்கு தண்ணீரில் நன்றாக கழுவி இதில் சேர்க்க வேண்டும். இதனை மூடி போட்டு மூடி 20 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை வேக விடவும்.

மிதமான தீயில் வைத்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு நன்கு வெந்ததும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். இப்பொழுது வேக வைத்த தண்ணீரை வடித்து சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள தோல் முழுவதும் நீக்கி விடலாம் . தோல் நீக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கை மிகவும் பொடியாக நறுக்கி விடாமல் ஓரளவு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் தாளிப்பதற்கு அரை டீஸ்பூன் கடுகு மற்றும் ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும். கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு நன்கு பொரிந்ததும் வெங்காயத்தை சேர்க்கலாம்.

நடுத்தர அளவிலான ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும். தோல் நீக்கிய மூன்று பூண்டு பற்களை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை இலை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கவும் இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கி பூண்டின் பச்சை வாசனை போனதும் நாம் ஏற்கனவே வேகவைத்து தோல் நீக்கி நறுக்கி வைத்திருக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை இந்த நிலையில் சேர்த்து வதக்கி விட வேண்டும். நாம் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைக்கும் பொழுதே உப்பு சேர்த்திருக்கிறோம் மீண்டும் உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது இந்த வறுவலுக்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை இதனை வேக விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அட்டகாசமான சர்க்கரைவள்ளி கிழங்கு வறுவல் தயார்.