அடடா… என்ன சுவை! வாயில் வைத்ததும் கரையும் பன்னீர் ஜாமுன்…!

ஸ்வீட் ஸ்டால்களிலும் உணவகங்களிலும் கிடைக்கும் மிக சுவையான ஒரு இனிப்பு வகை தான் பன்னீர் ஜாமுன். பலரும் இதனை இது போன்ற வெளியிடங்களில் மட்டுமே சுவைத்திருப்போம். இதனை வீடுகளில் அதிகம் செய்திருக்க மாட்டோம். காரணம் முதலில் பாலில் இருந்து பன்னீர் தயார் செய்து அதன் பிறகு ஜாமூன் செய்வது மிகவும் கடினம் என்று நினைத்திருப்போம். இனி கவலை வேண்டாம் மிக சுலபமாக வாயில் வைத்ததும் கரையும் படி அட்டகாசமான பன்னீர் ஜாமுன் நாம் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் பன்னீர் ஜாமுன் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பன்னீர் ஜாமுன் செய்வதற்கு முதலில் ஒரு லிட்டர் அளவு பாலை எடுத்து நன்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் நன்கு கொதித்து வந்த பிறகு இதனை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இது முழுமையாக ஆறிவிடக்கூடாது. சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இனி கடைகளில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே பன்னீர் செய்ய அருமையான டிப்ஸ்கள்!

ஒரு முழு எலுமிச்சையின் சாறு சேர்த்து கிளறி விடவும். ஒருவேளை பால் அப்பொழுது திரிந்து வரவில்லை என்றால் கூடுதலாக எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம். பால் நன்கு திரிந்து வந்ததும் இதனை ஒரு பெரிய வடிகட்டி வைத்து தண்ணீரை தனியாக வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த வடிகட்டியில் உள்ள பன்னீரை சாதாரண தண்ணீர் விட்டு இரண்டு முறை அலசி கொள்ளலாம். பிறகு ஒரு சுத்தமான வெள்ளை துணியில் இந்த பன்னீரை சேர்த்து கட்டி வைத்து விடவும். இதனை அப்படியே பத்து நிமிடங்கள் வரை தனியாக தண்ணீர் வடியும் படி வைத்துவிடலாம்.

தண்ணீர் முழுமையாக வடிந்ததும் ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த பன்னீரை சேர்த்து நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு சோள மாவு, ஒரு மேசை கரண்டி பால் பவுடர் மற்றும் பிங்க் நிற ஃபுட் கலர் சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவு மென்மையாக வரும் வரை கைகளால் தேய்த்து நன்கு பிசையவும்.

இப்பொழுது மாவை சிறுசிறு பகுதிகளாக எடுத்து உருளை வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும். விரிசல்கள் ஏதும் இல்லாதவாறு இதனை உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு சீனி சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மூன்று கப் அளவு தண்ணீர் சேர்க்கவும். சிறிதளவு ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

அதிகமான தீயில் அடுப்பை வைத்து ஒரு கொதி வரும் வரை இதனை வைக்க வேண்டும். சர்க்கரை கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை. சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கொதி வந்ததும் நாம் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பன்னீரை ஒவ்வொன்றாக இதில் சேர்த்துக் கொள்ளவும். மூடி போட்டு இதனை 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

குலாப் ஜாமுன் செய்யும் பொழுது இனி இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… சூப்பரான குலாப் ஜாமுன் டிப்ஸ்…!

20 நிமிடங்களுக்குப் பிறகு திறந்து பார்த்தால் பன்னீர் மென்மையாக வெந்து வந்திருக்கும். இதனை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம் அவ்வளவுதான் வாயில் வைத்ததும் கரையக்கூடிய பன்னீர் ஜாமம் கடைகளில் கிடைக்கும் சுவையிலேயே தயாராகி விட்டது