தைப்பூச திருநாளுக்கு இப்படி செய்து பாருங்கள் கடலைப்பருப்பு பாயாசம்…!

தைப்பூச திருநாள் இறைவன் வழிபாட்டிற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த தைப்பூச திருநாள் அன்று முருகப்பெருமானை நினைத்து பலரும் விரதம் இருப்பார்கள். அப்படி விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்யும்பொழுது பிரசாதம் செய்து படைத்து வழிபடுவார்கள். இந்தமுறை தைப்பூச திருநாளுக்கு இப்படி கடலை பருப்பு பாயாசம் செய்து பாருங்கள். இதன் சுவை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.

கடலைப்பருப்பு பாயாசம் செய்ய கால் கப் அளவு கடலைப்பருப்பை எடுத்து அதனை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அலசிய பிறகு நல்ல தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கடலைப்பருப்பு நன்கு ஊறிய பிறகு வேக வைத்தால் தான் சரியாக இருக்கும். இப்பொழுது ஊற வைத்த கடலைப்பருப்பை தண்ணீரை வடித்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆங்கில புத்தாண்டுக்கு அட்டகாசமான கேரமல் சேமியா பாயாசம்…!

இந்தக் கடலை பருப்புடன் ஒன்றரை மேசைக்கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பு மற்றும் கால் கப் அளவிற்கு ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக அலசி அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசியை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதில் ஒன்றரை கப் அளவு தண்ணீர் விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டரை கப் அளவு வரை இதில் தண்ணீர் சேர்க்கலாம். உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும்.

விசில் வந்த பிறகு பிரஷர் அடங்கியதும் தனியாக ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் அளவு வெல்லம் சேர்த்து அதனை தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி நாம் வேகவைத்து வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு 3 ஏலக்காய்களை தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். உப்பு சேர்த்தால் தான் இனிப்பு நன்றாக எடுத்துக் கொடுக்கும். அரை கப் அளவு தேங்காய் பாலை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக காய்ச்சாத பாலையும் சேர்க்கலாம்.

பண்டிகை நாட்களில் சுவையாக வித்தியாசமாக கேரட் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்…!

பால் சேர்த்த பிறகு இதனை நீண்ட நேரம் கொதிக்க விடக்கூடாது. சில நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடலாம். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இதில் முந்திரி, திராட்சை அல்லது தேங்காய் பல் என உங்களுக்கு விருப்பமானவற்றை சேர்த்து வறுத்து பாயாசத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.