சுரைக்காய் உடல் சூட்டை தணிக்க கூடிய ஒரு காய்கறி ஆகும். நீர்ச்சத்து நிறைந்த இந்த சுரைக்காயில் பாஸ்பரஸ், புரதம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் சி என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இந்த சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான தொந்தரவுகள் நீங்கும் மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை சாப்பிட்டு வர நீரிழிவு நோய்க்கு நல்ல தீர்வு கிடைக்கும் கை கால் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சுரைக்காய் ஒரு சிறந்த நிவாரணி வாருங்கள் இந்த சுரைக்காயை வைத்து எப்படி அட்டகாசமான சுரைக்காய் குழம்பு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஒரு பேனில் இரண்டு துண்டு பட்டை, 5 கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் கசகசா,1 நான்கு காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
வாசம் வரும் வரை வறுத்த பிறகு கால் கப் அளவு தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். இப்பொழுது இதனை தனியாக ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆற விட வேண்டும். முழுமையாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மல்லித்தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இனி குழம்பு வைக்கும் பொழுது இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்…!
இப்பொழுது குக்கரில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து கொள்ள வேண்டும். சோம்பு நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் பொடியாக நறுக்கிய இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி மூடி போட்டு வேக விட வேண்டும்.
தக்காளி நன்கு வெந்து மென்மையானதும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை எண்ணெயில் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
மசாலாக்கள் வதங்கி சுருண்டு வந்ததும் கால் கிலோ அளவு சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதனை மசாலாவுடன் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். சுரைக்காயை வதக்கியதும் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
இப்பொழுது இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். குக்கரில் செய்தால் மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும். விசில் வந்து அடங்கியதும் இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலை தூவி இறக்கினால் கறி குழம்பை மிஞ்சும் சுவையில் சுரைக்காய் குழம்பு தயார்.