பூரி அனைவருக்கும் பிடித்தமான டிபன் வகை ஆகும். பூரி என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது அதற்கு இணையாக கொடுக்கப்படும் பூரி மசாலா தான். உருளைக்கிழங்கு வைத்து செய்யும் இந்த பூரி மசாலா அனைவரின் பேவரைட் எனலாம். அனைவருக்கும் பிடித்தமான இந்த பூரி மசாலா உணவகங்களில் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். வாருங்கள் உணவகத்தில் கிடைக்கும் சுவையிலேயே இந்த உருளைக்கிழங்கு பூரி மசாலாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு பூரி மசாலா செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் இரண்டு உருளைக்கிழங்கு சேர்க்கவும். இதனுடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வைக்க வேண்டும். மூன்று விசில் வைத்து எடுத்த பிறகு உருளைக்கிழங்கு நன்கு வெந்திருக்கும். இப்பொழுது வேகவைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து இதனை துண்டுகளாக நறுக்கி லேசாக மசித்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு பொட்டுக்கடலை சேர்க்க வேண்டும். இந்த பொட்டுக்கடலையை பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலையை நன்றாக பொடித்த பிறகு இதனுடன் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் ஒரு டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று பச்சை மிளகாய்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக வதக்கி விடவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலை கரைசலை சேர்த்து கலக்கி விட வேண்டும். இந்த நிலையில் நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும். பிறகு மூடி போட்டு குறைவான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான பூரி கிழங்கு தயாராகி விட்டது…!