ஆங்கில புத்தாண்டுக்கு அட்டகாசமான கேரமல் சேமியா பாயாசம்…!

புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். புதிதாக வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்க அனைவரும் ஆவலாக காத்திருப்பார்கள். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஏதாவது ஒரு இனிப்பு செய்து அந்த நாளை சிறப்பாக்க வேண்டும் அனைவரும் விரும்புவது உண்டு. அப்படி வித்தியாசமாக இந்த புத்தாண்டுக்கு கேரமல் சேமியா பாயாசம் செய்து பாருங்கள். வழக்கமான பாயாசத்தை விட இது வித்தியாசமாக இருக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கும் பாயாசம் போன்ற சுவையுடன் இருக்கும். வாருங்கள் இந்த கேரமல் சேமியா பாயாசத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கேரமல் சேமியா பாயாசம் செய்வதற்கு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகியதும் அரை கப் அளவிற்கு சேமியாவை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வரை இந்த சேமியாவை வறுத்துக் கொள்ள வேண்டும். சேமியா வறுபட்டதும் இதனுடன் இரண்டுமேசை கரண்டி அளவிற்கு முந்திரிப்பருப்பை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை நெய்யில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். சேமியா மற்றும் முந்திரிப் பருப்பை வருத்தப்பிறகு இதனுடன் அரை லிட்டர் அளவு பாலை சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் வைத்து பால் நன்கு கொதிக்கும் வரை காய்ச்சவும். பால் கொதித்து கெட்டியானதும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.

இப்பொழுது வேறொரு கடாயில் அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை உருகத் தொடங்கியதும் இதனை கரண்டியை வைத்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை நன்கு உருகி பொன்னிறமாகும் வரை கிளறி விடவும். பொன்னிறமாக உருகி நமக்கு கேரமல் சிரப் கிடைத்தவுடன் இதனை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பாயசத்தில் சேர்க்கவும். இப்பொழுது இந்த பாயசத்துடன் கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து இதனை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட வேண்டும். இறுதியில் உங்களுக்கு விருப்பமான நட்ஸ்களை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான கேரமல் சேமியா பாயாசம் தயார்.