புத்தாண்டுக்கு வித்தியாசமாக செய்து பாருங்கள் வாயில் வைத்ததும் கரையும் கேரட் டிலைட்..!

புத்தாண்டு அன்று ஏதாவது வித்தியாசமான இனிப்பு வகை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த கேரட் டிலைட் முயற்சி செய்து பார்க்கலாம். வழக்கமான பாயாசம், கேசரி, பொங்கல் போன்று இல்லாமல் ஒரு முறை இந்த கேரட் டிலைட்டை வித்தியாசமாக முயற்சித்து பாருங்கள். இந்த கேரட் டிலைட் புதுமையாக மட்டும் இல்லாமல் மிக சுவையான ரெசிபியும் கூட. இதை செய்வதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை. குறைவான பொருட்களைக் கொண்டு இதனை சுவை நிறைந்ததாக செய்துவிடலாம். வாயில் வைத்ததும் கரையக்கூடிய இந்த கேரட் டிலைட்டை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கேரட் லைட் செய்வதற்கு முதலில் 500 கிராம் அளவு கேரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் இப்பொழுது நறுக்கிய கேரட்டை ஒரு குக்கரில் சேர்த்து இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை மூடி அதிகமான தீயில் வைத்து மூன்று விசில் வரும் வரை வைக்க வேண்டும். மூன்று விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கேரட் நல்ல மென்மையாக வெந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மென்மையாக வெந்து இருந்தால் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். வடிகட்டிய தண்ணீரை கீழே ஊற்ற வேண்டாம் இதனை ரெசிபியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாயில் வைத்ததும் கரையும் சூப்பரான நெய் ஒழுகும் மைசூர் பாகு!!

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத்த கேரட்டை சேர்க்கவும். இதனுடன் அரை கப் அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரை மற்றும் கேரட்டை விழுது போல அரைத்ததும் இதனுடன் கால் கப் அளவு கார்ன்ஃப்ளாரை சேர்க்கவும். பிறகு நாம் வேகவைத்த கேரட் தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியில் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பேனில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் கேரட் கலவையை சேர்க்கவும்.

இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரை டீஸ்பூன் அளவு வெண்ணிலா எசென்சை சேர்த்து இதனை நன்றாக கிளறி விட வேண்டும். நன்கு வெந்து இது சுருண்டு வரும் வரை கிளற வேண்டும். கேரட் பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வர வேண்டும். அவ்வாறு சுருண்டு வந்ததும் இதனை அடுப்பிலிருந்து இறக்கிவிடலாம். பிறகு வேறொரு பாத்திரத்தில் நெய் தடவி நாம் செய்து வைத்திருக்கும் கேரட்டை அதில் சேர்க்கவும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடலாம். பிறகு உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டு எடுத்துக் கொள்ளலாம். இதனை தேங்காய் துருவல் தூளில் புரட்டி நட்ஸ் தூவி எடுத்து வைத்தால் அழகான சுவையான கேரட் டிலைட் தயார்.