கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது இவ்வளவு சுலபமா?

முருங்கைக்காய் சாம்பார் மிக எளிமையான ரெசிபி ஆகும். வெள்ளிக்கிழமை போன்ற மங்கள நாட்களில் பெரும்பாலானோரின் வீட்டில் சைவ சமையல் தான். இதோ ஆவணி ஞாயிறு வேறு வரப்போகிறது. பெரும்பாலானோர் ஆவணி ஞாயிறு அன்று விரதம் இருப்பார்கள். வீட்டில் விரதம் என்றாலே அன்று சாம்பார் கட்டாயம் இடம் பெறும். சாம்பார்களிலேயே முருங்கைக்காய் சாம்பார் என்றால் அதற்கு தனி மவுசு உண்டு.

முருங்கைக்காயில் விட்டமின் ஏ, பி2, பி3, பி9 மற்றும் விட்டமின் சி உள்ளது. முருங்கைக்காய் செரிமான தன்மையை அதிகரிக்கும் உடலில் செல் வளர்ச்சியை அதிகரித்து உடல் உறுப்புக்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்பார்வைத் திறனை அதிகரிக்க முருங்கைக்காய் உதவுகிறது. இத்தனை நன்மைகள் தருவதோடு முருங்கைக்காயின் மனமும் சுவையும் சாம்பாருக்கு கூடுதலாக ருசியையும் கொடுக்கும். இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்வது மிகவும் எளிதானது.

இந்த முருங்கைக்காய் சாம்பார் செய்ய இரண்டு முருங்கைக்காய், 15 சின்ன வெங்காயம், ஒரு தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு எலுமிச்சை அளவு புளியினை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை ஆழாக்கு துவரம் பருப்பு எடுத்து அதனை கழுவி கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ள வேண்டும். குக்கரில் பருப்பு வேகும் நேரத்தில் தனியாக மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெங்காயம், தக்காளி, மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வேகவைத்து கொள்ள வேண்டும். காய் ஓரளவு வெந்ததும் மூன்று தேக்கரண்டி அளவு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

(சாம்பார் பொடியின் செய்முறை அறிய இதை படியுங்கள்: சாம்பார் பொடி இப்படி வீட்டில் நீங்களே தயாரித்து பாருங்கள்… ஒரு போதும் கடையில் இனி வாங்க மாட்டீர்கள்… )

சாம்பார் பொடி சேர்த்து கொதி வந்ததும் ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது குக்கரில் வேகவைத்த பருப்பை இதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பொடியில் இருக்கும் மிளகாய் வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது தனியாக ஒரு சிறு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் இரண்டு மிளகாய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும். இவை நன்கு பொரிந்ததும் கொதிக்கின்ற சாம்பாரில் இந்த தாளிப்பை சேர்த்து இறக்கி விடலாம்.

சாம்பார் சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்… செய்த சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது!

அவ்வளவுதான் கமகமவென முருங்கைக்காய் சாம்பார் தயாராகிவிடும்…!