சுலபமா செஞ்சு அசத்துங்க காலை உணவுக்கு ரவை பொங்கல்…!

ரவை என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது ரவை உப்புமா தான். அதிலும் சிலர் உப்புமா என்றாலே வெறுத்து ஓடுவார்கள். அப்படி ரவையை வைத்து உப்பா சாப்பிட பிடிக்காதவர்கள் ஒரு முறை இந்த ரவை பொங்கலை சாப்பிட்டால் போதும் இதற்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இது சுவையாக இருக்கும். காலை உணவிற்கு சுட சுட இந்த ரவை உப்புமாவை சாப்பிட்டு பாருங்கள் அந்த நாளே உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான ரவை உப்புமாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அரை கப் அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து அதை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் இதனை ஒரு குக்கரில் சேர்த்து ஒன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை இதனை வேக விட வேண்டும். பிறகு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் உருகியதும் அதில் 15 முந்திரி பருப்புகளை ஒன்றிரண்டாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அதையும் நன்றாக வதக்கவும்.

இப்பொழுது ஒரு கப் அளவு ரவையை இதில் சேர்க்கவும். குறைவான தீயில் வைத்து இந்த ரவையை ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வறுத்து எடுக்க வேண்டும். ரவை நன்றாக வறுபட வேண்டும். இப்பொழுது நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் பருப்பை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பருப்பை நன்றாக மசித்த பிறகு அதனுடன் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். அடுப்பை குறைவான தீயில் வைத்து நாம் வறுத்து வைத்திருக்கும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாமல் கிளற வேண்டும். ரவை தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி வெந்து வரும் வரை கிளறி விடவும். இறுதியாக மூன்று டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் அட்டகாசமான ரவை பொங்கல் தயார் இந்த பொங்கலை சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறலாம்.