பீட்ரூட் உடலுக்கு தேவையான மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி ஆகும். உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது நல்லது. காரணம் பீட்ரூட்டில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. ஆனாலும் இந்த பீட்ரூட்டை பலரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படி பீட்ரூட்டை விரும்பி சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கும் ஒரு ரெசிபி தான் பீட்ரூட் சாதம். இந்த பீட்ரூட் சாதத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம். பார்க்கும்பொழுதே கண்கவர் நிறத்துடன் இருக்கும் இந்த பீட்ரூட் சாதத்தை குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பீட்ரூட் சாதத்திற்கான ரெசிபியை பார்க்கலாம்.
பீட்ரூட் சாதம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி அதனை ஊற வைக்க வேண்டும். இந்த அரிசி குறைந்தது 10 நிமிடங்கள் ஊற விட வேண்டும். இரண்டு பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் முழு மல்லி, ஒரு சிறிய துண்டு பட்டை, 3 கிராம்பு, இரண்டு ஏலக்காய், சிறிதளவு கல்பாசி ஆகியவற்றை சேர்த்து பொடியாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை நன்றாக பொடித்த பிறகு இதனுடன் ஐந்து பல் பூண்டு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, ஏழு சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதுதான் இந்த பீட்ரூட் சாதத்திற்கு மிக முக்கியமான மசாலா.
வாயில் வைத்ததும் கரையும் பீட்ரூட் அல்வா இப்படி செய்து பாருங்கள்…!
இப்பொழுது ஒரு குக்கரில் ஒரு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். இதனுடன் ஒரு மேசை கரண்டி நெய்யும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் இதனுடன் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, ஒரு நட்சத்திர சோம்பு, இரண்டு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும். தக்காளி மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். தற்காலி சீக்கிரமாக வதங்க ஒரு டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த நிலையில் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து தக்காளியுடன் நன்கு வதக்கி விடவும். பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற அளவில் அனைத்தும் நன்கு வதங்கியதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இந்த நிலையில் உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். தண்ணீர் கொதித்ததும் நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்க்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை குறைவான தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வைத்து எடுத்தால். அட்டகாசமான பீட்ரூட் சாதம் தயார்.