இனி கடைகளில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம் சத்தான செர்லாக்…!

குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும் பொழுது பெரும்பான்மையான தாய்மார்கள் கடைகளில் விற்கப்படும் செர்லாக்கை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதுண்டு. செர்லாக் என்று அழைக்கப்படுவது பலவகையான தானியங்களின் கலவை என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு அனைத்து தானியங்களின் ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த தானியங்களின் ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க கடைகளில் வாங்கும் செர்லாக் கொடுப்பதை விட வீட்டிலேயே நாம் செர்லாக் தயாரித்துக் கொடுப்பது நல்லது. இந்த செர்லாக் தயாரிப்பது கடினமான வேலை அல்ல மிக எளிமையாக குழந்தைகளுக்கு சத்தான செர்லாக் நாம் தயார் செய்ய முடியும். வாருங்கள் இந்த செர்லாக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செர்லாக் தயாரிக்க ஒரு பவுலில் ஒரு கப் சாப்பாட்டு அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி தவிர வேறு எந்த அரிசியையும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் பச்சை பயிறு, 2 டேபிள் ஸ்பூன் கொள்ளு, இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம், 2 டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் மூன்று முறை நன்கு அலசிக்கொள்ள வேண்டும். பருப்பில் எந்த வித தூசியோ அழுக்கோ இல்லாதபடி இதனை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இது குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு என்பதால் கூடுதல் கவனத்தோடு செய்ய வேண்டும். நன்கு அலசிய பிறகு இதனை நல்ல தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரிசி மற்றும் பருப்பு தண்ணீரில் நன்கு ஊறியதும் இதில் உள்ள தண்ணீரை வடித்து சுத்தமான வெள்ளை துணியில் பரப்பி விட வேண்டும். அரிசி மற்றும் பருப்பில் தண்ணீர் இல்லாதபடி தண்ணீரை முழுமையாக வடித்து பரப்பவும். இதனை இப்பொழுது காய வைக்க வேண்டும். வெயிலில் நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் காய வைக்கவும். வெயிலில் நன்றாக காய்ந்ததும் ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து நாம் காய வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் கைவிடாமல் நன்கு வறுத்த பிறகு இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

அரிசி மற்றும் பருப்பு வகைகள் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் ஈரத்தன்மை ஏதும் இல்லாமல் துடைத்து நாம் காய வைத்து வறுத்து வைத்திருக்கும் அரிசி பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை மிஷினில் கொடுத்தும் அரைக்கலாம். திப்பிகள் கட்டிகள் இல்லாதவாறு இதனை அரைத்து எடுத்து சலித்து காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். குழந்தைகளுக்கு தேவைப்படும் பொழுது இதிலிருந்து ஒரு ஸ்பூன் மாவு எடுத்து அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு கட்டிகள் இன்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை அடுப்பில் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கிண்டினால் செர்லாக் தயாராகி விடும்.

தேவைப்பட்டால் பால் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். நன்கு ஆறியதும் இதனை குழந்தைக்கு பரிமாறவும். ஆறு மாத குழந்தையிலிருந்து 24 மாத குழந்தை வரை இதனை தாராளமாக கொடுக்கலாம். அவ்வளவுதான் சத்து நிறைந்த செர்லாக் வீட்டிலேயே தயாராகி விட்டது.