கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் விருந்தில் கட்டாயம் இடம் பெறக் கூடிய ஒரு சைடிஷ் வகைதான் உருளைக்கிழங்கு பால் கறி. உருளைக்கிழங்கு பட்டாணி ஆகியவற்றோடு தேங்காய் பால் சேர்த்து செய்யும் இந்த உருளைக்கிழங்கு பால் கறி அத்தனை சுவையாக இருக்கும். இந்த பால் கறியை வீட்டில் செய்யும் பொழுது அது கல்யாண வீடுகளில் செய்யும் சுவை போல இல்லை என்று நினைத்தால் அடுத்த முறை இப்படி செய்து பாருங்கள். விருந்துகளில் உண்பது போலவே அதே சுவையுடன் இந்த உருளைக்கிழங்கு பால் கறி இருக்கும். வாருங்கள் இந்த உருளைக்கிழங்கு பால் கறியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு பால்கறி செய்வதற்கு முதலில் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ள வேண்டும். இந்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிகவும் சிறிய துண்டாக இல்லாமல் ஓரளவு நடுத்தரமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து மேசை கரண்டி அளவிற்கு தேங்காய் துருவல் சேர்க்கவும். இதனுடன் 10 முந்திரிப் பருப்பு, அரை ஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் உருளைக்கிழங்கு பால் கறிக்கு மிக முக்கியமான மசாலா.
எளிமையான சுவை நிறைந்த சைட் டிஷ் ரெசிபி கத்திரிக்காய் பருப்பு…!
ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு பட்டை, மூன்று லவங்கம் ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது இரண்டு பச்சை மிளகாய் சிறிதளவு, கறிவேப்பிலை, அரை டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியதும் 50 கிராம் அளவு பட்டாணியை சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். பிறகு இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
பட்டாணி வெந்ததும் நாம் ஏற்கனவே வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து கிளறவும். அரை ஸ்பூன் அளவிற்கு கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்கு கிளறி விட வேண்டும். அனைத்தையும் நன்றாக கிளறிய பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பால் கறி கல்யாண வீட்டு சுவையில் தயாராகி விட்டது.