கறிவேப்பிலை உணவின் வாசனைக்காக சேர்க்கக்கூடிய சாதாரண பொருள் அல்ல. பெரும்பாலும் உணவை சாப்பிட்டுவிட்டு கறிவேப்பிலையை ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் நாம் ஒதுக்கும் கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்து இருக்கிறது. கறிவேப்பிலையில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடக்கத்தில் இருந்தே உணவில் அதிக அளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுதல் நலம். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளை தீர்க்க கறிவேப்பிலை துணை புரிகிறது. இத்தனை சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலையை வைத்து எப்படி சுவையான கறிவேப்பிலை பொடி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கறிவேப்பிலை பொடி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை சூடு செய்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பு, நான்கு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/4 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் கருப்பு எள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு நான்கு பல் பூண்டினை சேர்க்கவும். இதனை குறைவான தீயில் வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். இவை ஓரளவு வறுபடும் பொழுதே சிறிதளவு கட்டிப் பெருங்காயத்தை சேர்த்து அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை பொடிக்கு கூடுமானவரை கட்டிப் பெருங்காயத்தை பயன்படுத்துதல் நல்லது.
இட்லி தோசை என அனைத்திற்கும் ஏற்ற ருசியான கறிவேப்பிலை சட்னி…!
இப்பொழுது உங்கள் காரத்திற்கு ஏற்ப இதில் பத்திலிருந்து பதினைந்து காய்ந்த மிளகாய்களை சேர்க்கவும். மிளகாய் பருப்பின் சூட்டிலேயே நன்கு வெந்ததும் இரண்டு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலையை இதில் சேர்க்கும் முன்பு நன்கு கழுவி சுத்தம் செய்து நிழலில் காயவைத்த பிறகு சேர்க்க வேண்டும். இதனை ஒரு நிமிடம் வரை நன்கு வறுக்கவும். கறிவேப்பிலை நல்ல மொறுமொறுப்பாக வறுபட்டதும். இதனை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வறுத்த புளி சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொடி சூடாக இருப்பதால் இதனை ஆற வைத்து ஒரு கண்ணாடி சாரில் சேமித்து வைக்கலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இந்த கறிவேப்பிலை பொடியை சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். சுவையான இந்த கறிவேப்பிலை பொடி சத்துக்களும் நிறைந்திருப்பதால் தினமும் ஒரு ஸ்பூன் அளவு உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.