எளிமையான சுவை நிறைந்த சைட் டிஷ் ரெசிபி கத்திரிக்காய் பருப்பு…!

சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுக்கும் ஏற்ற ஒரு ரெசிபி கத்திரிக்காய் பருப்பு. இதனை சூடான சாதத்திற்கும் சாப்பிடலாம். சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த கத்திரிக்காய் பருப்பு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த கத்திரிக்காய் பருப்பு ரெசிபி மிக எளிமையான ஒரு ரெசிபி ஆகும். எளிமையாக குக்கரில் செய்து தாளித்தால் போதும் சுவையான கத்திரிக்காய் ரெசிபி நமக்கு தயாராகிவிடும். வாருங்கள் இந்த கத்திரிக்காய் பருப்பு ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு முறை செய்து பாருங்கள் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு போட்ட அருமையான குழம்பு!

கத்தரிக்காய் பருப்பு செய்வதற்கு முதலில் இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 2 தக்காளிகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கால் கிலோ அளவு கத்தரிக்காயை நான்காக நறுக்கி உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும். கத்தரிக்காய் பெரிதாக இல்லாமல் சிறிய அளவிலான கத்தரிக்காயாக தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய துண்டு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறி கொள்ளவும்.

ஒரு குக்கரில் ஒரு கப் அளவு துவரம் பருப்பை அலசி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இரண்டு பச்சை மிளகாய், ஊற வைத்த புளி, கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும். குக்கரை முடி நான்கு விசில் வரும் வரை இதனை வேக விட வேண்டும்.

கத்தரிக்காய் மற்றும் பருப்பு வெந்ததும் இதனை கடைந்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கால் ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கால் ஸ்பூன் சீரகம், 3 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் ஐந்து பல் பூண்டு, கால் ஸ்பூன் அளவு பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வேகவைத்து வைத்திருக்கும் கத்தரிக்காய் மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கலாம். இதில் சிறிதளவு நெய் சேர்த்து சூடாக இருக்கும் பொழுதே பரிமாறவும். அவ்வளவுதான் சுவை நிறைந்த எளிமையான கத்திரிக்காய் பருப்பு தயாராகிவிட்டது…!