உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே எக் நூடுல்ஸ் இப்படி செய்து பாருங்கள்…!

நூடுல்ஸ் அனைத்து குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். உணவகங்களுக்கு சென்று என்ன சாப்பிட வேண்டும் என்று கேட்டாலே பெரும்பான்மையான குழந்தைகளின் தேர்வு நூடுல்ஸ் ஆகத்தான் இருக்கிறது. ஆனால் அடிக்கடி நூடுல்ஸ் கடைகளில் உண்பது அவ்வளவு நல்லதல்ல. வீட்டில் செய்தால் குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் இருப்பதில்லை என்று நினைத்தால் நீங்கள் இதுபோல நூடுல்ஸ் செய்து பாருங்கள். உணவகங்களில் கிடைக்கும் அதே சுவைகள் நீங்கள் வீட்டிலேயே நூடுல்ஸ் செய்ய முடியும். வாருங்கள் நூடுல்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

நூடுல்ஸ் செய்வதற்கு ஹக்கா நூடுல்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து கொள்ளவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நூடுல்ஸை சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரம் மட்டுமே வேக வைத்தால் போதுமானது. அதிக நேரம் வேக வைத்தால் நூடுல்ஸ் குழைந்து விடும். நூடுல்ஸ் வெந்து மென்மையானதும் இதனை எடுத்து தண்ணீரை வடிகட்டி விடலாம். தண்ணீரை வடிகட்டிய பிறகு இதன் மேல் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

இப்பொழுது ஒரு பேனில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து முட்டையை வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே பேனில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பூண்டு ஒரு ஸ்பூன் சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கிய பாதி வெங்காயம், ஒரு கேரட், கால் பங்கு முட்டைக்கோஸ், பாதி குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும். காய்கறிகள் எண்பது சதவீதம் வெந்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சில்லி சாஸ், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இவற்றை நன்றாக கலந்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்து வடித்து வைத்திருக்கும் நூடுல்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு வதக்கி வைத்திருக்கும் முட்டையையும் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக வெங்காயத் தாள் பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் உணவகங்களில் கிடைக்கும் சுவையில் அட்டகாசமான நூடுல்ஸ் தயாராகிவிட்டது…!