சமையல் அறையில் சமையலை சுலபமாக்குவதற்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் நமக்கு சில டிப்ஸ்கள் தெரிந்திருந்தால் போதும். நம்முடைய சமையலை எளிதாக்குவதோடு வெகுவாக நேரத்தையும் மிச்சப்படுத்தி கொடுக்கும். வாருங்கள் அப்படி நேரத்தை மிச்சப்படுத்தக்கூடிய சில டிப்ஸ்களை நாம் பார்க்கலாம்.
சமையலில் ராணியாக இந்த டிப்ஸ்களை மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதும்!
சப்பாத்திக்கு குருமா செய்யும் பொழுது நமக்கு பட்டாணி முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். அப்படி முதல் நாள் இரவே ஊற வைக்க மறந்து விட்டீர்கள் அல்லது குறைவான நேரத்திற்குள் உங்களுக்கு பட்டாணி ஊறி இருக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரு ஹாட் பாக்சில் உங்களுக்கு தேவையான அளவு பட்டாணியை எடுத்து அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விடுங்கள். இந்த பட்டாணி ஒரு மணி நேரத்திற்குள் ஊறி தயாராக இருக்கும்.
ரசம், மீன் குழம்பு, புளிக்குழம்பு, காரக்குழம்பு என அனைத்திற்கும் நாம் சமையல் தொடங்கும் பொழுதே புளியை ஊற வைத்து விடுவோம். அப்பொழுதுதான் புளி கரைத்து ஊற்றும் பொழுது புளி ஊறி நன்றாக இருக்கும். அப்படி ஊற வைக்க மறந்து விட்டால் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி ஊற வைக்கலாம். அல்லது அடுப்பில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் புளி சட்டென்று ஊறிவிடும்.
முட்டை வேகவைக்க எப்பொழுதும் தண்ணீரில் முட்டையை சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைப்போம். அது நீண்ட நேரம் ஆகும். இதே முட்டையை சீக்கிரம் வேக வைக்க வேண்டும் என்று நினைத்தால் குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு எடுத்தால் போதும் முட்டை அழகாக வெந்து வந்துவிடும்.
சப்பாத்திக்கு மாவு பிசைவது என்பது மிக கடினமான வேலையாக பலருக்கும் தோன்றலாம். மாவு சீக்கிரம் பிசைய வேண்டும் என்று நினைத்தால் ஒரு மிக்ஸி ஜாரில் உங்களுக்கு தேவையான அளவு சப்பாத்தி மாவை சேர்த்து உப்பு சேர்த்து இரண்டு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர் என்ற விகிதம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்தால் சப்பாத்தி மாவு அழகாக சுருண்டு வந்திருக்கும். இதை இப்பொழுது நீங்கள் எளிதாக பிசைந்து உருட்டி தேய்த்துக் கொள்ளலாம்.