தொண்டை கரகரப்புக்கு இனி கவலை வேண்டாம்… இதோ சளி இருமலுக்கு இதமான சுக்கு மல்லி காபி…!

மழைக்காலம் தொடங்கி விட்டாலே பலருக்கும் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே எளிமையாக தீர்வு வேண்டும் என்றால் நீங்கள் சுக்கு மல்லி காப்பியை முயற்சி செய்து பார்க்கலாம். சளி தொந்தரவுகள் இருக்கும் பொழுது இந்த சுக்கு மல்லி காப்பியை பருகினால் தொண்டைக்கு இதமாக இருப்பதோடு உடலுக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. வழக்கமாக அருந்தும் டீ, காபிக்கு பதிலாக இந்த சுக்கு மல்லி காப்பியை நீங்கள் தாராளமாக அருந்தலாம். வாருங்கள் சுக்கு மல்லி காபி எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஈரம் ஏதும் இல்லாத ஒரு மிக்ஸி ஜாரில் 50 கிராம் அளவிற்கு சுக்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 40 கிராம் அளவிற்கு தனியா மற்றும் 8 கிராம் அளவிற்கு மிளகு ஆகியவற்றை சேர்க்கவும். இதனை நன்கு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் சுக்கு மல்லி காபிக்கு தேவையான பொடி ஆகும். நன்கு பொடித்து எடுத்த பிறகு இதனை காற்று புகாத ஒரு கொள்கலனில் இறுக மூடி வைத்துவிட வேண்டும். அப்பொழுதுதான் இதில் வாசனை போய்விடாமல் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மசாலா டீ…! அடுத்த முறை இப்படி டீ போடுங்க…!

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீரில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு சுக்குமல்லி பொடியை சேர்க்கவும். இந்த தண்ணீர் நன்கு கொதிக்க வேண்டும். சுக்கு மிளகு இவற்றின் காரமும் தனியாவின் வாசனையும் தண்ணீரில் இறங்கும் வரை இதனை கொதிக்க விட வேண்டும். இதனோடு இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நாட்டு சக்கரை சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் இதனை வடிகட்டி சூடாக பருகவும். நாட்டுச் சர்க்கரைக்கு பதில் நீங்கள் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். கூடுமானவரை வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. அவ்வளவுதான் சுவை நிறைந்த மணம் நிறைந்த சுக்கு மல்லி காபி தயார்!