பரோட்டா என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் சைட் டிஷ் ஆக ஊற்றி சாப்பிடும் சால்னா தான். இந்த சால்னா சைவ சால்னா, சிக்கன் சால்னா, மட்டன் சால்னா என பல்வேறு வகைகளில் கடைகளில் விற்கப்படுவது உண்டு. அதேபோல் சிக்கன், மட்டன், மற்ற காய்கறிகள் ஏதும் பயன்படுத்தாமல் வைக்கப்படும் பிளைன் சால்னாவும் சுவை நிறைந்ததாக பரோட்டாக்களுக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த பிளைன் சால்னா உணவகங்களில் மட்டும் தான் கிடைக்கும் என்று இல்லை. நாம் நம்முடைய வீட்டிலேயே அதே சுவையில் செய்ய முடியும். இது பரோட்டா மட்டுமில்லாமல் சப்பாத்தி, நாண், பூரி என அனைத்து உணவுகளுக்கும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் இந்த பிளைன் சால்னாவை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஹோட்டல் சுவையில் பரோட்டா, சப்பாத்திக்கு அட்டகாசமான சிக்கன் சால்னா!
பிளைன் சால்னா செய்வதற்கு முதலில் ஒரு பேனில் மூன்று மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், 2 கிராம்பு, அரை டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்க்கவும். இப்பொழுது இரண்டு பச்சை மிளகாய், ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுது, ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விடவும். இவற்றை வதக்கிய பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை மெல்லிசாக நறுக்கி அதை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லிசாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இரண்டு தக்காளிகளை அதே போல் மெல்லிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். தக்காளியும் வெங்காயமும் நன்கு குழைந்து கரைய வேண்டும். இதற்கு சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்கு வேக விட வேண்டும். இது வேகும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவிற்கு துருவிய தேங்காய், ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, 6 முந்திரி, ஒரு டீஸ்பூன் கசகசா ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கசகசாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையும் சேர்க்கலாம்.
பிறகு தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். இதனை மூடி போட்டு 15 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் சால்னா கொதித்து எண்ணெய் பிரிந்து வந்திருக்கும். இப்பொழுது நாம் பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவை நிறைந்த பிளைன் சால்னா ஹோட்டல் சுவையிலேயே தயாராகி விட்டது.