வீட்டில் உள்ள அரிசி, பருப்பு போன்ற பொருட்களில் வண்டுகள் பூச்சிகள் வராமல் இருக்க இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்…!

வீட்டில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை சிலர் மொத்தமாக வாங்கி ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். அப்படி வாங்கி வைக்கும் அரிசி, பருப்புகளில் சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள், எறும்புகள் போன்றவை வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. வெயில் காலத்தில் இது போன்று வண்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் குளிர்காலம், மழை காலம் போன்ற நேரங்களில் இதில் அதிகமாக வண்டுகள் வருவதை நாம் காணலாம். இப்படி அரிசி பருப்புகளில் வண்டுகள் வராமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.

எப்பொழுதும் அரிசி பருப்புகளை கொட்டி வைக்கும் பாத்திரங்கள் ஈரப்பதம் இல்லாத படி இருக்க வேண்டும். நன்கு துடைத்த பிறகு வெயிலில் சிறிது நேரம் வைத்த பிறகு இவற்றில் பொருட்களை கொட்டி காற்று புகாத வண்ணம் மூடி வைக்கவும்.

பருப்பு கொட்டி வைக்கும் பாத்திரத்தில் தோல் உரிக்கப்படாத பூண்டு, கிராம்பு அல்லது காய்ந்த மிளகாய் இவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டு வைக்கலாம். இதனால் வண்டு வருவதை தடுக்க முடியும்.

பருப்பு வகைகளை ஸ்டோர் செய்யும் பொழுது அவற்றில் சில காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் அதில் வண்டுகள் வருவதை தடுக்கலாம்.

பிரிஞ்சி இலையில் இருந்து வரும் வாசனைக்கு பூச்சிகள் அண்டாது. எனவே பருப்பு அல்லது அரிசி வகைகளில் சில பிரிஞ்சி இலைகளை போட்டு மூடி வைக்கலாம். இதனால் வண்டுகள் வருவதை தடுக்க முடியும்.

பாஸ்மதி அரிசியை கொட்டி மூடி வைக்கும் பொழுது சிறிது உப்பை கொட்டி கலந்து வைத்தால் வண்டு வருவதிலிருந்து காக்கலாம்.

சர்க்கரையில் எறும்பு வராமல் தடுப்பதற்கு நான்கு கிராம்பு போட்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் எறும்புகளின் வரத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

வீடுகளில் எறும்பு ஆங்காங்கே மண் தள்ளி காணப்பட்டால் அந்த இடங்களில் சிறிதளவு பெருங்காயத்தூளை தூவி விடலாம். பெருங்காயத்தூளின் மணத்திற்கு எறும்புகள் வராது.

வெயில் நன்கு அடிக்கும் பொழுது நாம் இந்த பருப்பு வகைகளை சிறிது நேரம் சூரிய ஒளி படும் படி வைத்த பிறகு மீண்டும் எடுத்து மூடி வைக்கவும். இப்படி அடிக்கடி செய்தால் வண்டுகள் வருவதை தடுக்கலாம்.

இந்த முறையில் அரிசி, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை என அனைத்து வகையான பருப்பு வகைகளையும் கடலை வகைகளையும் ஸ்டோர் செய்து வையுங்கள் அவற்றில் வண்டு பூச்சி வருவதை தடுத்திடுங்கள்.