பிரியாணி என்பது ஒரு உணவு என்பதை தாண்டி பலருக்கும் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயமாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு பிரியாணி மிகப் பிடித்தமான உணவாக இருக்கிறது. பெரும்பாலும் வீடுகளில் பிரியாணி செய்யும் பொழுது பலரும் எதிர்பார்ப்பது அது ஹோட்டல்களிலோ அல்லது பாய் வீட்டு கல்யாண வீடுகளில் கிடைக்கும் சுவையிலோ இருக்க வேண்டும் என்ற தான். காரணம் என்னதான் வீட்டில் சுவையாக செய்தாலும் கல்யாண வீடுகளிலும் உணவகங்களிலும் கிடைக்கும் பிரியாணியின் சுவைக்கு ஈடாகாது. பெரும்பாலும் வீடுகளில் பிரியாணி செய்யும் பொழுது பலரும் கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் மசாலாக்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இனி அவ்வாறு இல்லாமல் இப்படி வீட்டிலேயே மசாலாவை அரைத்து பிரியாணி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் உங்களின் பிரியாணிக்கு அடிமையாகி விடுவார்கள். வாருங்கள் பாய் வீட்டு பிரியாணி மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
கொத்தமல்லித்தழை நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக இருக்க இந்த டிப்ஸ்களை பாலோ செய்து பாருங்கள்!
பிரியாணி மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் அடுப்பில் வைத்துக் கொள்ளவும். முதலில் 100 கிராம் அளவு தனியாவை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். தனியா (முழு மல்லி) வறுபட்டதும் அதனை தனியாக வைத்துவிட்டு 25 கிராம் மிளகு சேர்த்து வறுக்கவும். பிறகு 25 கிராம் சோம்பு, மற்றும் 25 கிராம் சாய் ஜீரோ சேர்த்து இரண்டையும் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். சாய்ஜீரா பிரியாணிக்கு சுவை கூட்டக்கூடிய ஒரு மசாலா பொருள். இவை இரண்டையும் வறுத்த பிறகு தனியாக வைத்து விடலாம்.
இப்பொழுது 15 கிராம் கிராம்பு, 25 கிராம் அளவிற்கு சுருள் பட்டை, 25 கிராம் நட்சத்திர பூ, 15 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். சுருள்பட்டை இல்லை என்றால் சாதாரண பட்டை உபயோகிக்கலாம் ஆனால் சுருள்பட்டை கூடுதல் வாசனை கொடுக்கும். இவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்த பிறகு 25 கிராம் மராத்தி மொக்கு சேர்த்து வறுக்க வேண்டும்.
ஜாதிப் பத்திரி 5 கிராம் அளவு சேர்த்து அதையும் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். ஜாதி பத்திரி உணவிற்கு அதிக காட்டம் கொடுத்து விடும். எனவே 5 கிராம் மட்டும் சேர்த்தால் போதுமானது. 15 கிராம் அளவிற்கு பிரியாணி இலை சேர்த்து அதையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். 10 கிராம் அளவிற்கு பெரிய ஏலக்காயை சேர்த்து அதையும் நன்றாக வறுத்து வைத்து விடவும். 10 கிராம் கல்பாசி, 25 கிராம் காய்ந்த ரோஜா இதழ் ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மூன்று ஜாதி காய்களை இடித்து அதையும் கடாயில் சேர்த்து வறுத்து எடுக்கவும். மொத்தத்தில் ஒவ்வொரு மசாலா பொருளையும் தனித்தனியாக இரண்டு நிமிடங்கள் வரை வறுத்தால் போதுமானது. அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும்.
இப்பொழுது நாம் வறுத்து எடுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். மராத்தி மொக்கு மற்றும் பெரிய ஏலக்காய் இரண்டும் மிக்ஸியில் அரைபடாது எனவே இவற்றை தனியாக இடித்து மிக்ஸியில் சேர்க்கலாம். இப்பொழுது அனைத்து பொருட்களையும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் பொடியாக அரை பட்ட பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலிலோ அல்லது காற்று புகாத கொள்கலனிலோ வைத்து இறுக்க மூடி வைத்து விடவும். இந்த மசாலா ஒரு வருடம் ஆனாலும் கெடாது. அனைத்து வகையான பிரியாணிக்கும் இந்த மசாலாவை நீங்கள் உபயோகப்படுத்தலாம்.
கமகமக்கும் இறால் பிரியாணி… ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்…!
அவ்வளவுதான் கமகமக்கும் பிரியாணி மசாலா தயாராகி விட்டது.