இனி கடைகளில் வாங்க வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம் சுவையான கெட்சப்…!

அனைத்து வகையான ஸ்டாட்டர்ஸ்களுக்கும், ஸ்னாக்ஸ்களுக்கும் அட்டகாசமாக பொருந்தக்கூடிய ஒரு ரெசிபி கெட்சப். பெரும்பாலும் இந்த கெட்சப்பை கடைகளில் வாங்கி தான் பயன்படுத்துவோம். ஆனால் கடைகளில் விற்கப்படும் கெட்சப்பில் பலவிதமான ப்ரசர்வேட்டிவ்களை பயன்படுத்தி செய்யப்படுவது உண்டு. அதனால் வீட்டிலேயே நாம் கெட்சப் செய்யலாம். இதை செய்வது மிக கடினம் என்று நினைக்க வேண்டாம். சுலபமாக செய்ய முடியும் வாருங்கள். இந்த கெட்சப் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

கெட்சப் செய்வதற்கு ஒரு கிலோ அளவு தக்காளியை எடுத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும். அதில் உள்ள பச்சை நிற பகுதியை நீக்கி தக்காளிகளை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயத்தின் கால் பகுதியை மட்டும் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பேனில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, வெங்காயம் சேர்த்து இவற்றோடு நான்கு பல் பூண்டு, இரண்டு கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை ஆகியவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். இதனை மூடி போட்டு குறைந்தது 20 நிமிடங்கள் வரை நன்றாக வேக விடவும். தக்காளி மென்மையாகும் வரை வேக வைக்கவும். தக்காளி வேக வைக்க தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை. தக்காளியிலிருந்து வரும் தண்ணீரை போதுமானது தக்காளி நன்கு வெந்த பிறகு இதனை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதை ஒரு வடிகட்டியின் மூலம் வடித்து அதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் நாம் அரைத்து வடிகட்டிய தக்காளி சாறை சேர்க்கவும். இதனுடன் கால் கப் அளவு வினிகர் சேர்க்க வேண்டும். நான்கு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும். இனிப்பு குறைவாக இருந்தால் போதும் என நினைத்தால் மூன்று டேபிள் ஸ்பூன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். இதனோடு ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். தக்காளி சாறு இறுகி வரும் வரை கிளற வேண்டும். இதனை ஒரு ஸ்பூனில் எடுத்து தட்டில் வைத்து சாய்த்தால் தண்ணீராக ஓடக்கூடாது. அந்த அளவிற்கு வரும் வரை இதனை கிளறி விடவும். கெட்டியான பிறகு இதனை ஆறவைத்து ஒரு பாட்டிலில் அடைத்து குளிர்சாதன பெட்டிகள் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

அவ்வளவுதான் கடைகளில் கிடைக்கும் சுவையிலேயே அட்டகாசமான தக்காளி கெட்சப் தயார்.