பன்னீர் புலாவ் சுவையான எளிமையான ரெசிபியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த பன்னீர் புலாவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் இந்த பன்னீர் புலாவை செய்து கொடுக்கலாம். காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு சத்து நிறைந்ததாகவும் இந்த சாதம் இருக்கும். சுவையான இந்த பன்னீர் புலாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.
சூப்பரான சைட் டிஷ் புடலங்காய் முட்டை பொரியல்! சுலபமா இப்படி செஞ்சு பாருங்க…!
பன்னீர் புலாவ் செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு பாஸ்மதி அரிசியை கழுவி ஊற வையுங்கள். இந்த அரிசியை குறைந்தது 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு பவுலில் 250 கிராம் அளவு பன்னீர் சேர்க்க வேண்டும். இதனோடு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பன்னீர் முழுவதும் படும்படி புரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை சில நிமிடங்கள் வறுத்து தனியாக வைத்து விடலாம். இப்பொழுது அதே கடாயில் சிறிதளவு முந்திரியை சேர்த்து அதையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்க்க வேண்டும். நெய் உருகியதும் இரண்டு பிரியாணி இலை, ஒரு பட்டை, இரண்டு நட்சத்திர சோம்பு, 3 ஏலக்காய், 4 கிராம்பு, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே மூன்று பச்சை மிளகாய் மற்றும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு பொடியாக நறுக்கிய ஆறு பீன்ஸ், ஒரு கேரட் மற்றும் அரை கப் அளவிற்கு பச்சைப்பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
காய்கறிகள் வதங்கியதும் இதனோடு ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து சிறுது நேரம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு ஊற வைத்திருக்கும் அரிசி சேர்த்து மூன்று கப் அளவிற்கு தண்ணீர் விட வேண்டும். குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து குக்கர் ஒரு விசில் வரும் வரை வைக்க வேண்டும். குக்கர் விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து குக்கரை திறந்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீர், முந்திரி ஆகியவற்றை சேர்த்து மெதுவாக கிளறவும். சிறிதளவு கொத்தமல்லி தழை சிறிதளவு புதினா ஆகியவற்றை சேர்த்து இறுதியாக ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அரிசி உடையாமல் கிளறி இறக்கி விடலாம்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் புலாவ் தயார்…!