சூப்பரா செய்யலாம் வாழைக்காய் வைத்து காரசாரமான இந்த வாழைக்காய் குழம்பு…!

வாழைக்காய் வைத்து பொடிமாஸ், பொரியல், பஜ்ஜி என்று மட்டும் இல்லாமல் நாம் சுவையான வாழைக்காய் குழம்பு தயார் செய்ய முடியும். வாழைக்காய் குழம்பு காரசாரமான சுவை நிறைந்த குழம்பு. சூடான சாதத்தோடு இந்த வாழைக்காய் குழம்பும் அப்பளமும் இருந்தால் போதும் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு சுவை நிறைந்த இந்த வாழக்காய் குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

வாழைக்காய் பிடிக்காதவரா நீங்கள்? இப்படி செஞ்சா நீங்களே விரும்பி சாப்பிடுவீங்க! வாழைக்காயை வைத்து அருமையான வாழைக்காய் சாப்ஸ்…!

வாழைக்காய் குழம்பு செய்வதற்கு முதலில் இரண்டு வாழைக்காய்களை எடுத்து அதன் தோலை மேல்புறம் லேசாக சீவிக்கொள்ள வேண்டும். இந்த வாழைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இப்பொழுது இந்த வாழைக்காயோடு தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் நாம் மசாலா தடவிய வாழைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைக்காய் நன்கு வதங்கியதும் இதனை தனியாக ஒரு தட்டில் வைத்து விடலாம்‌.

இப்பொழுது அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, நான்கு பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளிகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை இதனை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் தக்காளி மென்மையாக வதங்கியதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் மூன்று டேபிள் ஸ்பூன் தேங்காய், நான்கு முந்திரி அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து இதையும் மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் இதில் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் தோல் உரித்து நறுக்கிய ஐந்து சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் சீரகத்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து இதனை பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் தக்காளி வெங்காய விழுதை சேர்த்து வதக்கி விடவும். இப்பொழுது தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை மூடி போட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இது கொதித்ததும் சிறிதளவு புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விட வேண்டும் ‌. பிறகு நாம் அரைத்து தயார் செய்து வைத்திருக்கும் தேங்காயை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பத்து நிமிடங்கள் நன்கு கொதித்த பிறகு நாம் ஏற்கனவே எண்ணெயில் வதக்கி வைத்திருக்கும் வாழைக்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் குழம்பு தயார்.