சூப்பரான இனிப்பு வகை.. இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள் மொறு மொறு சோமாஸ்…!

சோமாஸ் அனைவருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு வகையாகும். அளவுக்கு அதிகமான திகட்டும் படியான இனிப்பு இல்லாமல் மிதமான இனிப்போடு மொறுமொறுவென இருக்கும். இந்த சோமாஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சோமாஸ் செய்வது கடினம் என்று பலரும் முயற்சி செய்வதில்லை. ஆனால் சோமாஸ் செய்வது மிக சுலபம். வாருங்கள் சுலபமான இந்த மொறு மொறு சோமாஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தீபாவளிக்கு மொறுமொறு ஸ்னாக்ஸ் சுவையான ரிப்பன் பக்கோடா…! சுலபமாக செய்வது எப்படி?

சோமாஸ் செய்வதற்கு முதலில் ஒன்றரை கப் அளவு மைதா மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மைதா மாவோடு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை நன்கு பிசைந்த பிறகு ஒரு மேசை கரண்டி அளவிற்கு நெய் ஊற்றி இதனை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு ஈரத்துணியால் மூடி அப்படியே சிறிது நேரம் வைத்து விடலாம்.

ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அந்த நெய்யில் பொடியாக நறுக்கிய 10 முந்திரி, பொடியாக நறுக்கிய 10 பாதாம், 10 உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை நெய்யில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பிறகு இவற்றை தனியாக ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே நெய்யில் இரண்டு கப் அளவு ரவை சேர்த்து நன்கு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கிண்ணத்தில் ஒரு கப் அளவு சீனியை எடுத்துக் கொள்ளவும். வறுத்த ரவை சூடாக இருக்கும் பொழுதே அந்த ரவையை சீனியின் மீது கொட்ட வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் அடித்து பொடித்த அந்த மாவை இரண்டு மேசைக் கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த நட்ஸ் வகைகளை இதனுடன் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றோடு கால் டீஸ்பூன் அளவு ஏலக்காய் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஈஸியாக செய்யலாம் தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறு ஸ்வீட் பாம்பே காஜா…!

இப்பொழுது நாம் ஏற்கனவே பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இவற்றை மாவு தூவி மெல்லிசாக வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வட்ட வடிவில் தேய்த்த மாவின் நடுவில் ஒரு ஸ்பூன் அளவு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இனிப்பை வைத்து அரை வட்ட வடிவில் மடித்து கொள்ளவும். இதன் ஓரங்களை தண்ணீர் வைத்து ஒட்டி விடவும் இப்பொழுது ஃபோர்க் வைத்து இந்த ஓரங்களுக்கு டிசைன் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் இந்த சோமாஸ் பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடு செய்ய வேண்டும். எண்ணெய் மிதமான சூடு இருக்கும் பொழுது சோமாஸ்களை உள்ளே சேர்த்து சிவக்க பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறுமொறு சோமாஸ் தயாராகிவிட்டது. இதனை காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.