ஈஸியாக செய்யலாம் தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறு ஸ்வீட் பாம்பே காஜா…!

தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு என்று பலகாரங்கள் செய்யும் வேலை வீடுகளில் களைகட்ட தொடங்கி இருக்கும். இந்த தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், பாம்பே காஜாவை முயற்சி செய்து பாருங்கள். தீபாவளி பலகாரங்களில் வித்தியாசமான ஒரு பலகாரம் பாம்பே காஜா. மடக்கு பூரி போல இருக்கும் இந்த பாம்பே காஜா சர்க்கரைப்பாகில் சேர்க்கப்பட்டு இனிப்பு சுவையுடன் மொறுமொறுவென அட்டகாசமாக இருக்கும். இந்த பாம்பே காஜா செய்வதும் சுலபம். வாருங்கள் பாம்பே காஜா எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு செய்து பாருங்கள் மொறுமொறு மகிழம்பூ முறுக்கு…!

பாம்பே காஜா செய்வதற்கு ஒரு தட்டில் 200 கிராம் நெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு சோடா மாவு சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த தண்ணீருடன் அரை கிலோ அளவு மைதா மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். தண்ணீர் போதவில்லை கூடுதலாக தேவை என்றால் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். இதனை பூரிக்கு மாவு பிசைவது போல மிருதுவாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் அரை கிலோ அளவு சர்க்கரையை சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு இதனை பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். சர்க்கரை பாகு கம்பி பதம் வந்த பிறகு இறக்கி விடலாம். இதனை நன்கு ஆற விட வேண்டும் பிறகு ஏற்கனவே பிசைந்து வைத்திருக்கும் மாவை பூரிக்கு உருட்டுவது போல சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். இதனை பூரி பலகையில் வைத்து தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு முக்கோணமாக மடித்து கனமாக தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கலாம் அல்லது சுருள் வடிவில் சுருட்டி விருப்பமான அளவில் நறுக்கி அதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளலாம். நாம் ஏற்கனவே செய்து ஆறிய பாகை ஆழமான பாத்திரத்தில் ஊற்றி நாம் பொரித்த காஜாவை ஒவ்வொன்றாக பாகில் நனைத்து எடுக்கவும். இருபுறமும் நனைக்க வேண்டும். இரு புறம் நன்றாக நனைத்த பிறகு எடுத்து வேறொரு தட்டில் வைத்து ஆறிய பிறகு ஒரு டப்பாவில் அடுக்கி வைத்து கொள்ளலாம்.

வாயில் வைத்ததும் கரையும் மாவுருண்டை… இந்த தீபாவளிக்கு இப்படி செய்து பாருங்கள்!

அவ்வளவுதான் சுவையான பாம்பே காஜா தயார்!