ஆயுத பூஜை அன்று இப்படி தேங்காய் பால் பாயசம் செய்து பாருங்கள்!

ஆயுத பூஜை அன்று எளிமையாக சட்டென்று ஏதேனும் பாயாசம் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் இந்த தேங்காய் பால் பாயசத்தை நீங்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். இந்த தேங்காய் பால் பாயாசம் செய்வது மிக மிக சுலபம். மேலும் தேங்காய் பால் பாயாசம் சுவை நிறைந்ததாகவும் இருக்கும். வாருங்கள் சுவையான இந்த தேங்காய் பால் பாயசத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேங்காய்ப்பால் பாயாசம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு துருவிய தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 5 ஏலக்காய்களை சேர்த்து இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்த பிறகு இதனை வடிகட்டி இதிலிருந்து வரும் முதல் பாலை எடுத்து தனியே வைத்து விட வேண்டும். பிறகு வடிகட்டியில் இருக்கும் சக்கையை மட்டும் எடுத்து முக்கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும். இதனை மீண்டும் வடிகட்டி இரண்டாவது தேங்காய் பாலையும் எடுத்து வைக்கவும்.

பிறகு இரண்டு ஸ்பூன் அளவு பாசிப்பருப்பை எடுத்து இதனை வெறும் வானலயில் நன்கு சிவந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்கு வறுத்த பிறகு இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை அரைத்த பிறகு இதனுடன் ஊற வைத்த 10 முந்திரிப் பருப்பை சேர்க்கவும் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து இதனை நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கப் அளவு வெல்லத்தை அரைக்கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கரைசலை வடிகட்டி பாயாசம் செய்யவிருக்கும் பாத்திரத்தில் ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும். வெல்லம் நன்கு கொதித்ததும் இதனுடன் அரைத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதை நன்கு கொதிக்க விடவும். இவை கொதித்ததும் இதனுடன் எடுத்து வைத்திருக்கும் இரண்டாவது தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்ட பிறகு முதல் தேங்காய் பாலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். தனியாக ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து நெய் உருகியதும் அதில் நான்கு முந்திரிப் பருப்புகளை உடைத்து சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பாயாசத்தின் மேல் சேர்க்கவும்.

அவ்வளவுதான் சுவை நிறைந்த தேங்காய்ப்பால் பாயாசம் தயாராகி விட்டது!