சுலபமா செய்யலாம் அவல் வைத்து சுவையான அவல் தோசை…! செய்வது எப்படி?

அவல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும். நம் பாரம்பரியமான உணவு பழக்கத்தில் தொன்று தொட்டு அவல் இடம் பிடித்து வருகிறது. இந்த அவலானது சிவப்பு அவல், வெள்ளை அவல் என பல வகைகளில் இருக்கிறது. இவை இரண்டுமே அதிக சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு தேவையான விட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இத்தனை சத்துக்கள் நிறைந்த இந்த அவலை வைத்து சுவையான அவல் தோசை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

காலை உணவுக்கு சத்தான ரெசிபி.. ஈஸியா செய்யலாம் ஓட்ஸ் தோசை…!

அவல் தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி மற்றும் ஒரு கப் அளவு புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு கப் அவல் எடுத்து இதனை சுத்தம் செய்து தண்ணீரில் இரண்டு முறை அலசி கொள்ள வேண்டும். இதனை இரண்டு கப் தயிர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஊறவைத்த அரிசியை கிரைண்டரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரிசி கொஞ்சம் அரை பட்டதும் ஏற்கனவே ஊறவைத்த அவலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எட்டு வரமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த மாவை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நன்கு அரை பட்டதும் இறுதியில் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மாவை அள்ளி விடலாம். மாவில் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளலாம்.

காலை உணவுக்கு சத்தான கொண்டைக்கடலை தோசை! இதை முயற்சித்து பாருங்கள்!

இந்த மாவை புளிக்க வைத்த பிறகு பயன்படுத்த வேண்டும். முதல் நாள் இரவு தயார் செய்தால் மறுநாள் காலை ஊற்றலாம். தோசைக் கல்லை காய வைத்து எண்ணெய் தடவி மாவை ஊத்தப்பம் அளவில் சற்று கனமாக ஊற்ற வேண்டும். மாவை தடவ வேண்டாம் சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும். குறைவான தீயில் வைத்து வெந்தவுடன் எடுத்து விடலாம். சூடான கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான அவல் தோசை தயாராகி விட்டது.