இப்படி ஒரு ரசத்தை நீங்க வீட்ல செய்திருக்கவே மாட்டீங்க… அட்டகாசமான சுவையில் கல்யாண ரசம்!

நாம் வழக்கமாய் சாப்பிடும் ரசத்தை விட சில கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் ரசம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். காரணம் இதில் அப்பொழுதே அரைத்த மசாலாக்கள் பயன்படுத்தி செய்வதால் தான் நல்ல மணம் மற்றும் சுவை நிறைந்ததாக கல்யாண வீட்டு ரசம் உள்ளது. இதே சுவை மற்றும் மணத்துடன் நாமும் வீட்டிலேயே ரசம் செய்ய முடியும். வாருங்கள் எப்படி கல்யாண வீட்டு ரசத்தை வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கொள்ளு ரசம் இப்படி வச்சு பாருங்க.. கொழுப்பு கரைந்து ஓடிடும்!

முதலில் இதற்கான மசாலாவை தயார் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் இரண்டு ஸ்பூன் முழு மல்லி, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் மிளகு, 5 வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ஆறியதும் இதனை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கல்யாண ரசத்துக்கான ரசப்பொடி தயாராகி விட்டது.

இப்பொழுது நான்கு தக்காளி பழங்களை நன்கு கழுவி நான்காக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் அரைத்த இந்த தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அந்த தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீரி இதனுடன் சேர்த்து 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பத்து நிமிடங்கள் இந்த கரைசல் கொதித்த பிறகு வேகவைத்த கால் கப் அளவு துவரம் பருப்பை இதனுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இப்பொழுது ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இப்பொழுது நாம் ஏற்கனவே வறுத்து அரைத்து வைத்த பொடியை இதனுடன் தூவி ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம். இதற்கு தாளிப்பு செய்ய ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு வர மிளகாய், கை நிறைய கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை ரசத்தின் மேல் சேர்க்கவும்.

நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்! இப்படி செய்து பாருங்கள்..

அவ்வளவுதான் மணம் வீசும் கல்யாண வீட்டு ரசம் தயார்!