கிராமத்து சுவையில் சட்டென்று செய்யலாம் சூப்பரான பொரிச்ச குழம்பு!

பொரிச்ச குழம்பு பெரும்பாலும் தமிழகத்தின் பல பகுதிகளில் செய்யக்கூடிய ஒரு வகை குழம்பு ஆகும். இந்தக் குழம்பை தஞ்சாவூர் பகுதிகளில் குருமா குழம்பு என்றும் அழைப்பர். இதை வைப்பதற்கு பருப்பு வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை, புளி ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து சுவையாக இந்த பொரிச்சக் குழம்பை செய்ய முடியும். இந்த பொரிச்ச குழம்பு எப்படி குக்கரில் எளிமையாக கிராமத்து சுவையிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பொரிச்ச குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். என்னை காய்ந்ததும் அதில் இரண்டு பிரியாணி இலை, இரண்டு துண்டு பட்டை, நான்கு கிராம்பு, சிறிதளவு கல்பாசி, ஒரு நட்சத்திர சோம்பு, அரை ஸ்பூன் சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இதில் அரை ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது, இரண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

இப்பொழுது குழம்புக்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம். மூன்று ஸ்பூன் மல்லித்தூள், ஒன்றரை ஸ்பூன், மிளகாய் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை போன பிறகு ஒரு தக்காளியை நீளவாக்கில் நறுக்கி இதனுடன் சேர்ந்து வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது இதில் நாம் விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்க்கலாம் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், அவரைக்காய் போன்ற காய்களை சேர்க்கலாம்.

கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு… ஒரு முறை வச்சு பாருங்க ஒரு பருக்கை கூட மிஞ்சாது!

காய்கறிகள் வதங்கும் நேரத்தில் இதற்கான தேங்காய் விழுதை தயார் செய்து கொள்ளலாம். ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் அளவு தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் பொட்டு கடலை, 3 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். 10 மிளகு சேர்த்துக் கொள்ளவும். இதனை அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரைத்த விழுதை வதங்கிய காய்கறிகளுடன் சேர்த்து வதக்கி விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் இறுதியாக குழம்புக்கு தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒன்று அல்லது இரண்டு விசில் விட்டால் போதும். பிரஷர் நீங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் சுவையான குழம்பு தயாராகி இருக்கும். இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான பொரிச்ச குழம்பு தயார்!