15 நிமிடத்தில் டேஸ்டான அரிசி பருப்பு சாதம்! எளிமையான ரெசிபி இதோ!

அவசர அவசரமாக சமைக்கும் பொழுது சாதம் தனியாக சாம்பார் தனியாக வைக்க நேரம் இல்லாத போது இந்த அரிசி பருப்பு சாதம் ஒருமுறை சமைத்து பாருங்கள். 15 நிமிடத்தில் சமையல் செய்த வேலை சட்டென முடிந்துவிடும். எளிமையான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்வதற்கான ஈசி டிப்ஸ் இதோ!

முதலில் இந்த சாதம் செய்வதற்கு அரை கப் துவரம் பருப்பு, இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு , ஒரு கப் சாப்பாட்டு அரிசி சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அரிசி, பருப்பு ஒரு பக்கம் ஊரும் நேரத்தில் இந்த சாதம் செய்வதற்கு தேவையான சின்ன வெங்காயத்தை தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

கடுகு நன்கு பொறிந்ததும் அரை தேக்கரண்டி கடலைப்பருப்பு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் காரத்திற்கு ஏற்ப இரண்டு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளிப்பழம் வதங்கும்பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கினால் எளிமையாக தக்காளி நன்கு மசிந்து விடும். இதை அடுத்து அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒன்றரை தேக்கரண்டி சாம்பார் தூள் அரை தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் அரிசியை இதனுடன் சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து கொடுக்க வேண்டும்.

வறுத்து அரைத்த கேரளா ஸ்டைல் சிக்கன் குழம்பு!

இறுதியாக ஊற வைத்திருக்கும் எலுமிச்சை பழ அளவு புளி கரைசல், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவிடலாம்.

மூன்று விசில்கள் வைத்து இறக்கினால் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார். வீட்டில் பெரிதாக எந்த காய்கறிகளும் இல்லாத நேரம் வெறும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வைத்து இந்த சுவையான சாதத்தை எளிமையாக செய்துவிடலாம். இந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு மசாலா அல்லது அப்பளம் வைத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.