திகட்டாத கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு! ரகசிய ரெசிபி!

கல்யாண வீட்டு விருந்து என்றாலே அறுசுவை விருந்துதான். இனிப்பில் துவங்கி அனைத்து வகையான காய்கறிகள், குழம்பு என அறுசுவைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் சில நேரங்களில் சாம்பாரை விட வத்தக் குழம்பிற்கு மவுசு அதிகம் தான். காரசாரமாக திகட்டாத சுவையில் இருக்கும் கல்யாண வீட்டு வத்தக்குழம்பு ரெசிபி இதோ.

இந்த வத்த குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். கடலைப்பருப்பு நன்கு வறுபட்டதும் ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். உளுந்தம் பருப்பு நிறம் மாறியதும் இரண்டு தேக்கரண்டி மல்லி, அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம், நான்கு முதல் ஐந்து காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்து இந்த பொருட்களை சில நிமிடங்கள் ஆரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக அதை கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு கப் சுண்டைக்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயில் ஒரு தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

காலை உணவை ஹெல்தியாக மாற்ற… ஓட்ஸ் வைத்து சுவையான இட்லி செய்வதற்கான ரெசிபி!

அதன் பின் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக 10 முதல் 15 வெள்ளை பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இப்பொழுது அரை தேக்கரண்டி மஞ்சள், ஒரு தேக்கரண்டி வத்தல் பொடி, நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்க வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசனை சென்றவுடன் ஒரு எலுமிச்சை பல அளவு புளியை ஊறவைத்து அதன் சாற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் நாம் முதலில் வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். குழம்பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் பத்து முதல் 15 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து திறந்து பார்க்கும் பொழுது கடாயில் ஓரங்களில் குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்தால் இப்பொழுது வத்த குழம்பு தயார். இப்பொழுது இறுதியாக நாம் வறுத்து வைத்திருக்கும் சுண்டக்காயை இதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கினால் சுவையான குழம்பு ரெடி.