ஜவ்வரிசியை வைத்து பாயாசம் மட்டுமல்ல பத்தே நிமிடத்தில் தித்திப்பான அல்வா செய்யலாம்!

பொதுவாக ஜவ்வரிசியை நம் பாயாசம் செய்வதற்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். வயிற்றுப் புண்களை குணப்படுத்தும் இந்த ஜவ்வரிசியை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் ஜவ்வரிசியை வைத்து பாயாசம் இல்லாமல் தித்திப்பான அல்வா செய்யலாம். அதற்கான எளிமையான ரெசிபி இதோ….

இந்த அல்வா செய்வதற்கு முதலில் அரை கப் ஜவ்வரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக பொடி செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் ஒருமுறை சலித்துக் கூட மாவு தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் வேளையில் நாம் பொடி செய்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். குறிப்பாக வேகமாக சேர்க்கும் பொழுது கட்டிகள் விழ வாய்ப்புள்ளது. அதனால் மெதுவாக சேர்த்து நன்கு கலந்து கொடுக்க வேண்டும்.

மிதமான தீயில் மாவை கொதிக்க வைக்க வேண்டும். அல்வா நன்கு கவரும் வண்ணத்தில் வர வேண்டும் என்பதற்காக அரை பீட்ரூட்டை நன்கு துருவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதன் சாரி மட்டும் அரைத்து வடிகட்டி பீட்ரூட் ஜூஸை அதில் சேர்த்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் ஜூஸை மாவுடன் நன்கு கலக்க வேண்டும். அதனுடன் அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் கலந்து கொடுக்க வேண்டும். மாவு நன்கு வெந்து வரும் நேரத்தில் அரை கப் ஜவ்வரிசிக்கு ஒரு கப் சர்க்கரை என்ற வீதத்தில் சர்க்கரையை சேர்த்து கலக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து வரும் பொழுது ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும்.

நம் வீட்டு சாம்பார் வாசனையில் ஊரே மணக்க வேண்டுமா? சாம்பார் பொடி செய்வதற்கான ரெசிபி இதோ!

இந்த நேரத்தில் நெய்யில் வறுத்த முந்திரி பத்து முதல் 15 சேர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் கிளறும் பொழுது ஜவ்வரிசி மாவு அல்வா பதத்திற்கு வந்துவிடும். இப்பொழுது அடுப்பை அணைத்து ஒரு பத்து நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.

அதன் பின் ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி விருப்பமான முறையில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது ஒரு கிண்ணத்தில் சேர்த்தோ பரிமாறலாம். சுவையான ஜவ்வரிசி அல்வா தயார்.