கொத்து பரோட்டா சாப்பிட முடியாத நேரங்களில் வீட்டிலேயே எளிமையான சப்பாத்தி கொத்து செய்யலாம் வாங்க!

வீட்டில் சப்பாத்தி செய்யும் பொழுது சில நேரங்களில் மீதம் ஆகிவிட்டதா.. அதே சப்பாத்தியை அப்படியே மீண்டும் திருப்பி கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அந்த சப்பாத்தியை வைத்து வித்தியாசமாக முட்டை சேர்த்து கொத்து செய்து கொடுத்துப்பாருங்கள். மீண்டும் வேண்டும் என கேட்கும் அளவிற்கு சுவை அருமையாக இருக்கும். முட்டை சப்பாத்தி கொத்து செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த சப்பாத்தி கொத்து செய்வதற்கு முதலில் நான்கு சப்பாத்திகளை உருண்டைகளாக உருட்டி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். குறிப்பாக முட்டைக்கோஸ் நறுக்குவது போன்று நீளம் நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பாதி தக்காளி பழம், ஒரு குடைமிளகாய் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். நான்கு சப்பாத்திக்கு மூன்று முட்டைகள் வீதம் உடைத்து கடாயில் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் முட்டை வறுவல் செய்வதுபோல முட்டையை நன்கு வறுத்தெடுக்க வேண்டும்.

வாய்ப்புண், குடல் புண்ணை குணப்படுத்தும் பச்சைப்பயிறு பால்கறி!

மூட்டை நன்கு வதங்கியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தி கைப்பிடி அளவு மல்லிபுதினா இலைகள் தூவி கிளற வேண்டும். தொடர்ந்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் கலந்து கொடுக்கும் பொழுது முட்டையும் சப்பாத்தியும் நன்கு கலந்து வாசனை வரும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறலாம். மீதமுள்ள சப்பாத்தியை அப்படியே கொடுக்காமல் இதுபோல முட்டை சேர்த்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை விரும்பி சாப்பிடுவார்கள்.