வல்லமை தரும் வல்லாரைக் கீரையில் இப்படி துவையல் அரைத்துப் பாருங்கள்…! குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்!

வல்லாரைக் கீரை வல்லமை தரும் கீரை என்றும் அழைப்பார்கள் காரணம் இதில் ஏராளமான பலன்கள் உள்ளது. வல்லாரைக் கீரை என்றதும் ஏதோ கிடைத்தற்கரிய மூலிகை போல என்று நினைக்க வேண்டாம். தற்பொழுது கீரை விற்பவர்களிடம் தாராளமாக வல்லாரைக் கீரை கிடைக்கிறது. அல்லது தண்ணீர் நிறைந்த தோட்டப்பகுதிகளில் நாமே கூட எளிதாக வல்லாரைக் கீரையை வளர்க்க முடியும்.

இந்த வல்லாரையை குறைந்தது வாரம் இருமுறையாவது உணவில் சேர்த்து வந்தால் பல விதமான நன்மைகளை பெறலாம். வல்லாரையில் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வல்லாரை மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தைத் தூண்டி எப்பொழுதும் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும். இதனால் மூளையின் செயலாற்றல் அதிகரிக்கும். நினைவாற்றல் மேம்படும். வல்லாரையை அடிக்கடி உண்பவர்களுக்கு வயதான பின்னரும் மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு.

ரத்த சோகை உள்ளவர்கள் வல்லாரை சாப்பிட ஹீமோகுளோபின் அதிகரிக்கும். வல்லாரை கண் பார்வை திறன் அதிகரிக்கவும் துணை புரிகிறது. வல்லாரை உடல் எரிச்சலை போக்கி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வல்லாரையை பொடி செய்து பல் துலக்கினால் பற்களில் படிந்துள்ள கடினமான கறைகளைக் கூட நீக்கிவிடும். மணத்தக்காளி கீரை போன்றே வல்லாரைக் கீரையும் குடல் புண்ணை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் மிக்கது. இந்த வல்லாரை கீரையை எப்படி துவையல் செய்து சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்.

வல்லாரைக் கீரை துவையல்:

ஒரு கட்டு வல்லாரைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் முழுவதையும் நன்கு வடிய வைத்து விடவும்.

ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின்பு அதில் ஆறு வர மிளகாய், மற்றும் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

பின் இரண்டு பல் பூண்டு மற்றும் பத்து சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

இவை நன்கு வதங்கியதும் ஏற்கனவே ஆய்ந்து அலசி வைத்த கீரையை போட்டு வதக்கி ஆற வைக்க வேண்டும்.

கீரையை மிக நீண்ட நேரம் வதக்க வேண்டிய அவசியம் இல்லை. கீரை ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய கீரையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இப்பொழுது கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை தாளிக்க வேண்டும்.

தாளித்தப்பின் அரைத்த கீரையை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். துவையல் கொதித்தபின் இறக்கி விடலாம். வல்லாரைக் கீரை துவையல் தயார்!

இதனை சாதத்தில் பிசைந்தோ அல்லது தோசை, இட்லி போன்ற சிற்றுண்டிகள் உடன் சேர்த்தோ உண்ணலாம்.

Exit mobile version