அடுத்த முறை சாம்பார் வைக்கும் பொழுது இந்த டிப்ஸ்களை பாலோ செய்ய மறந்துடாதீங்க…!

அனைத்து வீட்டின் சமையல் அறையிலும் வாரம் இருமுறையாவது இடம் பிடிக்க கூடிய ஒரு உணவு தான் சாம்பார். வெண்டைக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், வெங்காய சாம்பார், இட்லி சாம்பார் என்று பல்வேறு வகையான சாம்பாரை நாம் நம் வீட்டில் அடிக்கடி ருசித்திருப்போம். இந்த சாம்பார் செய்யும் பொழுது சில நேரம் ஏதாவது ஒன்றை கவனக்குறைவாக சொதப்பி விடுவோம். அப்படி சொதப்பல் சாம்பாராக இல்லாமல் உங்கள் சாம்பாரை சுவையான சாம்பாராக மாற்ற இந்த டிப்ஸ்களை பாலோ செய்து பாருங்கள்.

விரத நாட்களில் வெண்டைக்காய் சாம்பார் இப்படி செய்து பாருங்கள்…!

சாம்பாருக்கு எப்பொழுதும் பருப்பு வேக வைக்கும் பொழுது பெரும்பாலும் குக்கரை தான் பயன்படுத்துவோம். அந்த குக்கரில் விசில் வரும் பொழுது விசிலின் வழியாக பருப்போ இல்லை வேறு ஏதேனும் பொருட்களையோ வேக வைத்திருந்தால் அந்த உணவுப் பொருள் சிதறி குக்கர் மட்டுமில்லாமல் அடுப்பு முழுவதும் தெறித்து கரை ஆகிவிடும். அதனை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அப்படி சிதறாமல் இருக்க குக்கரை மூடுவதற்கு முன்பே அதன் விசில் பகுதியை ஒரு பின் கொண்டு நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரை மூடவும். அப்படி இல்லை என்றால் குக்கரை மூடிய பிறகு ஒரு ஈரத் துணியை சுருட்டி குக்கரின் விசில் பகுதியில் இடைவெளி விட்டு சுற்றி வைக்கவும். அப்படி வைத்தால் சிதறும் பொருள் அந்த ஈரத் துணிக்குள் மட்டுமே படும். வெளியே வந்து அடுப்பை பாழாக்காது.

சாம்பாருக்கு புளி கரைத்து ஊற்றும் பொழுது கவனக்குறைவாக கூடுதலாக புளியை கரைத்து ஊற்றி விட்டீர்கள் என்றால் அது சாம்பாரின் சுவையை கெடுத்து விடும். அந்த சாம்பாரை சரி செய்வதற்கு ஒரு எளிமையான டிப்ஸ் இருக்கிறது. அதாவது சிறிதளவு நாட்டுச்சர்க்கரை அந்த சாம்பாரின் சேர்த்து கலக்கி விடுங்கள். சில நிமிடங்கள் கொதித்த பிறகு சாம்பாரின் புளிப்பு தன்மை குறைந்து சாம்பார் கூடுதல் சுவையோடு இருப்பதை நீங்கள் காணலாம்.

நீங்கள் வழக்கமாக வைக்கும் சாம்பாரின் சுவையை அதிகரிப்பதற்கு ஒரு எளிமையான டிப்ஸ் உள்ளது. சாம்பார் நன்கு கொதித்த பிறகு அதனை இறக்குவதற்கு முன்பாக ஒரு ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் அல்லது நெய் அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை சாம்பாருடன் சேர்க்கும் பொழுது சாம்பாரின் மணமும் சுவையும் பல மடங்கு கூடுதலாகும். இந்த சாம்பார் மணம் உங்கள் வீடு முழுவதும் பரவி அனைவரையும் பாராட்ட வைக்கும்.

சம்பாருக்காக வெண்டைக்காய் நறுக்கும் பொழுது அல்லது வேறு ஏதாவது பொரியலுக்காக நறுக்கும் பொழுதோ வெண்டைக்காய் பிசுபிசுப்பாக இருப்பதை பார்த்திருப்போம். இது நறுக்குவதற்கு சிரமமாக இருக்கலாம். எனவே வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன்பாக சிறிது நேரம் தண்ணீரில் போட்டு பிறகு ஒரு துணியில் பரப்பி அதன் ஈரத்தன்மையை துடைத்து விடுங்கள். அதன் பிறகு வெண்டைக்காயை நறுக்கும்பொழுது பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.

கமகமக்கும் முருங்கைக்காய் சாம்பார்…! முருங்கைக்காய் சாம்பார் செய்வது இவ்வளவு சுலபமா?

அதேபோல வெண்டைக்காயை தனியாக வதக்கும் பொழுது வெண்டைக்காய் வழவழப்புத் தன்மை இல்லாமல் அதே சமயம் அதன் நிறமும் மாறாமல் இருக்க வேண்டும் என்றால் வெண்டைக்காயை வதக்கும் பொழுதே அதனுடன் அரை ஸ்பூன் அளவு ஆம்சூர் பவுடர் சேருங்கள். பவுடர் என்பது உலர்த்தப்பட்ட மாங்காயின் பொடியாகும். இந்த பொடியை சேர்ப்பதால் வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மை போவதோடு அதன் நிறமும் மாறாமல் நன்றாக இருக்கும்.

Exit mobile version