எந்த மாசம் ஆக இருந்தாலும் சரி… இந்த மீன் குழம்பை தினமும் கூட சாப்பிடலாம்! சைவ மீன் குழம்பு ரெசிபி!

புரட்டாசி மாதம் வந்தால் போதும் அசைவத்திற்கு பாய் பாய் தான். ஆனால் இந்த ஒரு மாதம் அசைவம் சாப்பிடாமல் அதற்கு இணையான சுவை மற்றும் சத்து நிறைந்த சைவ உணவுகளை சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் மீன் குழம்பு சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். சைவ மீன் குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

சைவ மீன் குழம்பு செய்வதற்கு புதைய நாள் இரவு ஒரு கப் பச்சைப்பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் பச்சைப்பயிறு நன்கு தண்ணீருடன் ஊற வேண்டும்.

அப்படி ஊறிய பச்சை பயிரை மீண்டும் கழுவி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு கைப்பிடி அளவு தேங்காய், ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்பொழுது வாழை இலையை லேசாக அடுப்புத்தீயில் வாடிக்கொள்ள வேண்டும். நாம் அரைத்து வைத்த மாவை நீள வாக்கில் உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே வாழை இலை தண்டை ஐஸ் குச்சி போல நினைத்து மேலே மாவு வைத்து துண்டைகளாக தயார் செய்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் தயார் செய்து வைத்திருக்கும் பச்சை பயிறு உருண்டைகளை நீராவியின் வேக வைக்க வேண்டும்.

இட்லி வேக வைக்கும் பாத்திரத்தில் பாசிப்பயிறு உருண்டைகளை 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். அதன் பிறகு இதனை சூடு தணிய ஆரவைத்து விடலாம். அந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், பொடியாக நறுக்கிய மூன்று பழுத்த தக்காளி பழங்கள், ஐந்து பல் வெள்ளை பூண்டு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, கைப்பிடி அளவு கருவேப்பிலை, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கடுகு நன்கு புரிந்து பிறகு தாராளமாக கைப்பிடி அளவு வெள்ளை பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைப் பூண்டு எண்ணெயோடு வதங்கும் நேரத்தில் ஒரு கப் சின்ன வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு பொன்னிறமாக மாறிவரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி விழுது சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்க வேண்டும் தக்காளியின் பற்றி வாசனை சென்றவுடன் ஊற வைத்திருக்கும் புளி கரைசலை சேர்த்துக் கொள்ளலாம்.

இதனுடன் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய், இரண்டு தேக்கரண்டி தனியா தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும்.

திடீரென ஏற்படும் சளி தொல்லை, உடல் வலி பிரச்சனையா? மருத்துவ குணம் நிறைந்த சுவையான மிளகு சாதம் ரெசிபி இதோ!

புளியின் பச்சை வாசனை சென்றவுடன் நாம் வேகவைத்து ஆற வைத்திருக்கும் பச்சை பயிறு உருண்டைகளை மீன் வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி நறுக்கிய இந்த துண்டுகளை கடாயில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

குறைந்தது இரண்டு நிமிடம் வரை மிதமான தீயில் நன்கு கொதித்து வரவேண்டும். இறுதியாக ஒரு கப் தேங்காய் பால் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான சைவ மீன் குழம்பு தயார். இந்த மீன் குழம்பு சாப்பிடுவதற்கு அப்படியே அசைவ மீன் குழம்பு சுவையில் இருப்பது மட்டுமின்றி சத்து நிறைந்ததாகவும் இருப்பதால் எல்லா நாட்களையும் இது விரும்பி சாப்பிடலாம்.

Exit mobile version