புரட்டாசி மாதம் வந்தாலே பெரும்பாலான வீடுகளில் சைவ சமையல் மட்டும்தான். அந்த மாதம் முழுவதுமே அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். இது ஒரு சில அசைவ பிரியர்களுக்கு சற்று ஏமாற்றமாக கூட இருக்கலாம். கவலை வேண்டாம் அசைவம் சாப்பிடாமலேயே சைவ உணவில் அட்டகாசமாக அதே சுவையுடன் ஒரு சைவ மீன் வறுவல் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதற்கு வாழைக்காய் மட்டுமே போதும் இதை வைத்து மீன் வறுவலின் சுவையிலேயே அட்டகாசமான சைவ மீன் வறுவலை செய்து விடலாம்.
ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!
சைவ மீன் வறுவல் செய்வதற்கு நான்கு வாழைக்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வாழைக்காய்களை அதில் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். நீண்ட நேரம் விட்டு விடக்கூடாது சில நிமிடங்கள் கொதித்த பிறகு வாழைக்காய் எடுத்து ஆறியதும் அதில் உள்ள தோல்களை நீக்க வேண்டும். தோல் நீக்கிய வாழைக்காய்களை சாய்வாக வைத்து நீள்வட்ட வடிவத்தில் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய இந்த வாழைக்காயின் நடுவில் கத்தியை கொண்டு ஒரு சிறிய துளைகளை இட்டுக்கொண்டால் பார்ப்பதற்கும் மீன் போலவே இருக்கும்.
இப்பொழுது ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு, முக்கால் ஸ்பூன் அரிசி மாவு, முக்கால் ஸ்பூன் மைதா மாவு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவை கலந்ததும் இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும்.
கரைத்த இந்த மாவில் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய்களை போட்டு வாழைக்காயின் அனைத்து பகுதிகளிலும் இந்த மசாலா படும்படி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதனை அரை மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு தோசை கல்லில் ஒரு மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் வாழை காய்களை அதில் போட்டு இருபுறமும் நன்கு திருப்பி வேகவிட்டு எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் மொறு மொறுவென சுவையான சைவ மீன் வறுவல் தயார்!