பாரம்பரிய உணவு முறை என்றாலே காலம் காலமாக நம் முன்னோர் தொட்டு இன்று வரை நாம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் தான். அதிலும் வாழைப்பூ வடை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்த வாழைப்பூவில் உள்ள பலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியது. அப்படிப்பட்ட வாழைப்பூ வடை செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…
இந்த வாழைப்பூ வடை செய்வதற்கு முதலில் ஒரு வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு கப் வாழைப்பூ எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கப் கடலைப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து விட வேண்டும்.
இப்பொழுது நன்கு ஊறி இருக்கும் கடலை பருப்புவை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு தேக்கரண்டி பொறிகடலை, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், கைப்பிடி அளவு கருவேப்பிலை, அரை தேக்கரண்டி சோம்பு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை பரபரவென அரைத்துக் கொண்டால் போதுமானது.. மேலும் இதை அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஹைதராபாத்தில் மிக பிரபலமான அப்பல்லோ சிக்கன்!
அரைத்த இந்த விழுதுகளை மீண்டும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவுடன் சேர்த்து வாழைப்பூவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நம் உள்ளங்கையில் வைத்து சரி அழுத்தம் கொடுக்கும் பொழுது வடை வடிவிற்கு வந்துவிடும். ஒரு அகலமான கடாயில் பொரித்தெடுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் நாம் தட்டி வைத்திருக்கும் வடையை அதில் சேர்த்து பொரித்தெடுக்க வேண்டும்.
முன்னும் பின்னும் நன்கு பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் பொறித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.