படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். சத்து நிறைந்த உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலமாகவே மூளை நல்ல சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்படும். தினமும் ஒரு கீரை என்னும் கணக்கில் கீரை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் குறிப்பாக படித்து வரும் குழந்தைகளுக்கு வல்லாரைக் கீரை மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரித்து புத்தி கூர்மையை வளர்ப்பதில் வல்லாரை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வகையில் வல்லாரைக் கீரை வைத்து அருமையான மற்றும் எளிமையான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு கட்டு வல்லாரைக் கீரை வாங்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு காய்ந்த வத்தல் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து சின்ன வெங்காயம் 10 சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த ரெசிபி செய்யும் பொழுது பெரிய வெங்காயத்தை பயன்படுத்தாமல் சின்ன வெங்காயம் பயன்படுத்தும் பொழுது சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு கப் வல்லாரை கீரையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான தீயில் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை வல்லாரைக் கீரையை வதைக்க வேண்டும்.
கீரை நன்கு வதங்கி வந்ததும் சிறிய எலுமிச்சை பல அளவு புளி, ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது வதக்கி அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும். அடுத்ததாக அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷலான ஸ்வீட் ரெசிபி! இனி கடை பலகாரங்களுக்கு பாய் பாய் தான்…
இப்பொழுது அருமையான வல்லாரைக் கீரை துவையல் தயார். இந்த துவையலை தோசை, இட்லி, சப்பாத்தி, பழைய சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். இப்பொழுது இந்த துவையல் வைத்து அருமையான சாதம் ஒன்று செய்யலாம்.
இதற்காக அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் வல்லாரைக் கீரை துவையல், ஒரு கட்டு கருவேப்பிலை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இப்பொழுது ஒரு கப் சாதத்தை கடாயில் சேர்த்து கிளறி கொடுத்து இறக்கினால் சுவையான வல்லாரைக் கீரை சாதம் தயார். இந்த சாதத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் கொடுத்து விடலாம்.