தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மைக்கு மட்டுமில்லாமல் சில வகையான உணவு வகைகளுக்கும் தலைசிறந்த இடமாக உள்ளது. கோவில் நகரமான தஞ்சாவூர் உணவிற்கும் தலைசிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. பலவிதமான உணவு ரெசிபிகள் பிரசித்தி பெற்றிருந்தாலும் தஞ்சாவூருக்கே தனி சிறப்பாக பார்க்கப்படும் உரப்பு அடை நம் வீட்டில் செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் கருப்பு உளுந்து, ஒரு கப் கடலை பருப்பு, ஒரு கப் துவரம்பருப்பு என அனைத்தையும் சம அளவில் எடுத்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
4 மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ஊறவைத்த பொருட்களை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு, அரை தேக்கரண்டி சோம்பு, 3 காய்ந்த வத்தல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது அடை மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும் தோசை மாவு பதத்திற்கு அரைக்க தேவையில்லை.
மாவு சற்று கெட்டியாகவே இருக்க வேண்டும் தண்ணீராக இருக்கக் கூடாது. அடுத்து அரைத்து எடுத்த மாவுடன் பொடியாக நறுக்கிய சுரைக்காய், பொடியாக நறுக்கிய ஒரு கப் தேங்காய், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள், கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதில் விருப்பப்பட்டால் தேங்காவை நன்கு எண்ணெயில் வதக்கி அதன் பிறகு சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த அடை மாவு தயாராக உள்ளது. இதை தோசை கல்லில் செய்யாமல் சற்று குழிவாக இருக்கும் தோசைக்கல் அல்லது ஆப்ப கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். முதலில் அந்த கல்லில் தாராளமாக இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ளலாம்.
கோழிக்கோடு ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் மீன் வருவல் ரெசிபி!
மாவை வட்ட வடிவில் அதில் திரட்டி கொள்ள வேண்டும். இந்த அடை மாவை மெல்லிசாக திரட்ட கூடாது. சற்று மெத்து மெத்துவாக இருக்கும் விதத்தில் திரட்டி கொள்ள வேண்டும். இப்பொழுது தாராளமாக எண்ணெய் சேர்த்து முண்ணும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் தஞ்சாவூர் ஸ்பெஷல் உரப்பு அடை தயார். இந்த அடைக்கு சற்று காரம் கூடுதலாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம்.