அதிகப்படியான பசியின் போது நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பெரும்பாலும் ருசியை கணக்கில் கொள்வது இல்லை. ஆனால் நிதானமாக நிறுத்தி சாப்பிடும் பொழுது நாம் என்ன சாப்பிடுகிறோம் அதன் ருசி என்ன என்பதை ஆராய்ந்து சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதிலும் சமையலில் கைதேர்ந்தவர்கள் ஒரு முறை சாப்பிட்ட உடனே அதில் கலந்திருக்கும் உணவு பொருட்களை மனதில் நினைவு கொள்வார்கள். அப்படி சாப்பிடும் உணவை அனுபவித்து ரசித்து ருசித்து சாப்பிடுபவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள். வாங்க இந்த ரெசிபி செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒரு அகலமான கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டி சீரகம், மூன்று தேக்கரண்டி தனியா சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக 5 தேக்கரண்டி உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளலாம்.
உளுந்து நன்கு வதங்கி பொன்னிறமாக மாறிய பிறகு வதக்கி அனைத்து பொருட்களையும் தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே கடாயில் காய்ந்த வத்தல் ஐந்து, ஒரு கொத்து கருவேப்பிலை, ஒரு கையளவு பூண்டு அதாவது பத்து முதல் 15 பூண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒன்றாக நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து கையளவு பொடியாக நறுக்கிய ஒன்று அல்லது இரண்டு தக்காளி பழங்கள், 20 முதல் 30 கிராம் அளவுள்ள புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மசிந்து வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது தக்காளி நன்கு குலைந்ததும் நாம் முதலில் வதக்கிய பொருட்களை கடாயில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது அனைத்து பொருட்களையும் ஒரு சேர நன்கு ஒரு முறை கிளறி கொள்ள வேண்டும். வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதுகளை ஒரு தட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மையப் பகுதியில் துவையலுக்கு தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி வெல்லம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பட்டர் சிக்கன் மசாலாவின் அதே சுவையில் முட்டை பட்டர் மசாலா! சிக்கனமான ரெசிபி இதோ!
அடுத்ததாக ஒரு சிறிய தாளிப்பு கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய், இரண்டு காய்ந்த வத்தல், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுந்து, ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலை இதனோடு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
இப்பொழுது அருமையான காரசாரமான துவையல் தயார். இந்த துவையல் சூடான சாதம் முதல் இட்லி, தோசை, பழைய சாதம் என அனைத்திற்கும் கச்சிதமாக இருக்கும்.