தைப்பொங்கல் திருவிழா கடந்த வாரம் முடிவடைந்தாலும் பொங்கலுக்கு நாம் சாப்பிட்ட நாட்டு காய்கறிகள் கூட்டும் அதன் சுவையும் நம் நாவை விட்டு அகலாத வண்ணம் அப்படியே இருக்கும். இந்த மாதமே கிடைக்கும் ஏழு வகையான நாட்டு காய்களை வைத்து காரசாரமாக வைக்கும் அந்த குழம்பிற்கு அனைவரும் அடிமைகள் தான். மேலும் இந்த குழந்தை ஒரு நாள் மட்டுமல்லாமல் இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிட்டாலும் சுவை அருமையோ அருமையாக இருக்கும். வாங்க மீண்டும் ஒருமுறை அதே காய்கறிகளை வைத்து சுவையான திருவாதிரை ஸ்பெஷல் கூட்டு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க…
முதலில் ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் மூன்று தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம், காய்ந்த வத்தல் ஐந்து சேர்த்து வாசனை வரும் வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் அரை கப் தேங்காய் துருவலை இறுதியாக சேர்த்து தேங்காவின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடலாம். அடுத்ததாக ஒரு அகலமான பெரிய பாத்திரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ளலாம்.
அதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்கள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதில் இப்பொழுது நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முள்ளங்கி, பரங்கிக்காய், சிறு கிழங்கு, முருங்கைக்காய், கருணைக்கிழங்கு, காராமணி, கேரட், பீன்ஸ், அவரைக்காய், வாழைக்காய், பச்சை மொச்சை என நமக்கு பிடித்தமான காய்கறிகளை தாராளமாக சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
காய்கறிகள் பாதியாக வதங்கியதும் மூன்று தேக்கரண்டி சாம்பார் தூள், முக்கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். காய்கள் பாதி அளவு வெந்தால் போதுமானது.
காய்கள் பாதியாக வெந்திருக்கும் நேரத்தில் அடுத்ததாக கைப்பிடி அளவு நறுக்கிய கத்திரிக்காய், வெள்ளை பூசணி, மாங்காய் என தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசலையும் சேர்த்து மீண்டும் காய்கறிகளை கொதிக்க விட வேண்டும்.
திடீரென முடி கொட்டும் பிரச்சனையா? தினமும் ஒரு தேக்கரண்டி இந்த பொடி போதும்!
காய்கறிகள் நன்கு வெந்து வரும் நேரத்தில் வேகவைத்த ஒரு கப் துவரம் பருப்பை மசித்து சேர்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக நாம் முதலில் வறுத்து அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சாம்பார் கூட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து உப்பு சரிபார்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் நல்லெண்ணெயில் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கி கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான திருவாதிரை நாட்டு காய்கறிகள் கூட்டு தயார்.