உணவே மருந்தாக இருக்கக்கூடிய ஒரு காய் வகை தான் கோவக்காய். கிராமங்களில் எளிதாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த தாவரத்தின் இலை, வேர், காய் என அனைத்து பாகங்களும் நல்ல மருத்துவம் குணம் நிறைந்த பொருட்களாக உள்ளன. கோவக்காயை உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் தாராளமாக சாப்பிடலாம். மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்த காயாகவும் இருக்கிறது. புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மை காத்திடவும் இந்த கோவக்காய் உதவுகிறது. கல்லீரல் பிரச்சனைகள் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு தர இந்த கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ குணம் நிறைந்ததால் இந்த காயின் சுவை குறித்து நீங்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. இந்த காயை வைத்து சுவையான நிறைய ரெசிபிகள் நாம் செய்ய முடியும். அப்படி ஒரு ரெசிபி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். இந்த கோவக்காய் வைத்து சுவையான கோவக்காய் வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் 3 மேசை கரண்டி அளவு தேங்காய் பூவை சேர்த்து வறுக்க வேண்டும். தேங்காய் பூவை வறுக்கும் பொழுது இதனுடன் 6 வர மிளகாய் சேர்த்து இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும். இரண்டும் நன்றாக வறுபட்டதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஐந்து பல் பூண்டு, இரண்டு மேசை கரண்டி பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி தான் நம்முடைய கோவக்காய் வறுவலுக்கு நல்ல சுவையும் மணமும் தரக்கூடிய முக்கியமான பொருள்.
இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேஜை கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் சீரகம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்கு பொரிந்ததும் இதனுடன் கால் கிலோ அளவு கோவக்காய் சுத்தம் செய்து வட்ட வடிவில் மெல்லிசாக நறுக்கி அதனை இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
கோவக்காய் நன்கு வதங்கியதும் இப்பொழுது மசாலாக்கள் சேர்க்கலாம் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கோவக்காய் உடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இவற்றை நன்கு கலந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மசாலாக்களை கோவக்காயுடன் சேர்த்து நன்கு வதக்கியதும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறி இதனை பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவையான கோவக்காய் வறுவல் தயாராகி விட்டது!