சிக்கன் வைத்து எவ்வளவு வகை வகையான குருமா, தொக்கு, பிரட்டல், 65 என செய்தாலும் சில வகையான உணவுகள் ஹோட்டல்களில் மட்டும் பிரபலமாகவே இருக்கும். அப்படி ஒன்றுதான் செஸ்வான் சிக்கன். ஹோட்டல்களில் மட்டுமே மிக அருமையான சுவையில் கிடைக்கும் இந்த செஸ்வான் சிக்கன் குழந்தைகளுக்கு மிகப் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று. இதை நம் வீட்டிலேயே செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ..
இந்த செஸ்வான் சிக்கன் செய்வதற்கு சிக்கனின் கால் பகுதி 5 எடுத்துக் கொள்ள வேண்டும். அதை நன்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அப்படி கழுவி சுத்தம் செய்த சிக்கனை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகு சீரகப்பொடி, அரை தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி கான்பிளார் மாவு, ஒரு தேக்கரண்டி மைதா மாவு, ஒரு முட்டையை உடைத்து சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
முட்டையில் உள்ள ஈரப்பதத்தை வைத்து சிக்கனில் மசாலாக்கள் படும் விதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை குறைந்தது பத்து முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அந்த நேரத்தில் ஒரு அகலமான பாத்திரத்தில் சிக்கன் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடு படுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் ஊற வைத்திருக்கும் சிக்கனை மைதா மாவில் ஒரு முறை முக்கிய எடுத்து எண்ணெயில் பொறித்தெடுக்க வேண்டும். பொன்னிறமாக முன்னும் பின்னும் சிக்கனை பொறித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு சூடாக இருக்கும் பொழுது சிக்கனை பொரித்தெடுக்க வேண்டும். சிக்கன் சேர்த்தவுடன் மிதமான தீயில் அடுப்பை வைத்து விட வேண்டும். இல்லை என்றால் சிக்கனில் மேல்புறம் நன்கு பொன்னிறமாகவும் உள்புறம் சற்று வேகாமலும் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மிதமான தீயில் சிக்கனை நன்கு வெந்து வரும் வகையில் பொறுத்தெடுக்க வேண்டும்.
இப்படி மொறு மொறுவென பொறித்தெடுத்த சிக்கனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் ஒரு தேக்கரண்டி சோயா சாஸ், இரண்டு தேக்கரண்டி செஸ்வான் சாஸ், ஒரு தேக்கரண்டி நாட்டுச்சக்கரை, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையில் நாம் புரிந்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.
இறுதியாக வெள்ளை எள் தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான செஸ்வான் சிக்கன் தயார்.